இந்திய அணியைப் பொறுத்தவரை பங்களாதேஷூக்கு எதிரான போட்டியில் நிச்சயம் சில மாற்றங்கள் இருக்கும் எனத் தெரிகிறது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்தது இந்திய அணிக்கு சற்றே நெருக்கடியை அளித்துள்ளது. அடுத்ததாக, பங்களாதேஷ் அணியுடன் இந்தியா இன்று மோதுகிறது. அடுத்து இலங்கை அணியை எதிர்கொள்ளவுள்ளது. இந்த இரண்டு போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்றாலே போதும். இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிடும். இருப்பினும், இன்றையப் போட்டியில் வெற்றி பெற்றால்தான் இங்கிலாந்து அணியுடன் பெற்ற தோல்வியை சரிகட்ட முடியும்.
காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து விஜய் சங்கர் விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக மயங்க் அகர்வால் இந்திய அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே, காயம் காரணமாக தொடக்க வீரர் ஷிகர் தவான் அணியில் இருந்து விலகினார். அவருக்குப் பதிலாக ரிஷப் பண்ட் அணியில் சேர்க்கப்பட்டார். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியிலும் அவர் விளையாடினார்.
இந்திய அணியில் ஏற்பட்ட மாற்றங்கள்:
இந்திய அணியைப் பொறுத்தவரை பெரிதாக மாற்றங்கள் எதனையும் செய்யவில்லை. ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல், தோனி, ஹர்திக் பாண்ட்யா, கேதர் ஜாதவ், பும்ரா, சாஹல், குல்தீப் ஆகியோர் இதுவரை நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் விளையாடியுள்ளனர்.
இந்திய அணியில் காயம் காரணமாக புவனேஸ்வர் குமாருக்குப் பதிலாக முகமது ஷமி களமிறக்கப்பட்டார். அதேபோல், காயம் காரணமாக ஷிகர் தவான் விளையாடாததால் அவருக்குப் பதிலாக விஜய் சங்கர் அணியில் சேர்க்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து விஜய் சங்கருக்கு காயம் ஏற்பட்டதால் அவருக்கு பதிலான ரிஷப் பண்ட் களமிறக்கப்பட்டார். இதனைத் தவிர்த்து பெரிய மாற்றங்கள் எதனையும் இந்திய அணி மேற்கொள்ளவில்லை.
காயத்தில் கே.எல்.ராகுல்
இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பீல்டிங் செய்யும் போது கே.எல்.ராகுலுக்கு காயம் ஏற்பட்டது. எல்லைக்கோட்டில் பந்தினை தாவி பிடிக்க முற்பட்ட போது அவரது முதுகு பகுதியில் அடிபட்டது. அதனால், அவர் இன்றையப் போட்டியில் விளையாடுவாரா என்பது சந்தேகம்தான்.
அதேபோல், பேட்டிங்கை பொறுத்தவரையிலும் கே.எல்.ராகுல் தொடர்ச்சியாக சொதப்பி வருகிறார். தொடக்க வீரராக களமிறங்கும் அவர் ரன்கள் குவிக்க மிகவும் சிரமப்படுகிறார். ஒரு அரைசதம் உட்பட 172 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அவர் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.
கேதர் விளையாட வாய்ப்பு மிகமிக குறைவு
இந்திய அணியில் அதிக விமர்சனங்களுக்கு தோனி - கேதர் ஜாதவ் ஜோடி ஆளாகியுள்ளது. இதில், தோனியை காட்டிலும் கேதர் ஜாதவ் மீது அதிக அழுத்தம் உருவாகியுள்ளது. தனக்கு கிடைத்த வாய்ப்புகளை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. 5 போட்டிகளில் களமிறங்கி வெறும் 80 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
ஆப்கான் அணிக்கு எதிரான போட்டியில் மட்டுமே 52 ரன்கள் எடுத்தார். மிகவும் நிதானமாக விளையாடுகிறார். அதுவும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் கடைசி நேரத்தில் தோனியுடன் சேர்ந்து அவர் விளையாடிய விதம் ரசிகர்களை பொறுமையிழக்க செய்துவிட்டது. அதனால், இன்றையப் போட்டியில் நிச்சயம் அவர் விளையாட வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.
சுழற்பந்துவீச்சில் மாற்றம் இருக்குமா?
நடப்பு உலகக் கோப்பை தொடரில் சுழற்பந்துவீச்சாளர்களான சாஹல், குல்தீப் இருவரும் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. விக்கெட் வீழ்த்தவில்லையென்றால் கூட பரவாயில்லை. இருவரும் ரன்களை வாரி வழங்குகின்றனர். இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இவர்கள் இருவரின் 20 ஓவர்களில் 160 ரன்கள் அடிக்கப்பட்டது. இதுதான், இங்கிலாந்து அணி 337 ரன்கள் குவிக்க காரணமாக அமைந்தது.
அதனால், இரு சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவருக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிகிறது. இங்கிலாந்து போட்டியில், ஷமி 5 விக்கெட்களை வீழ்த்தினாலும் முக்கியமான் கட்டத்தில் ரன்களை வாரி வழங்கினார்.
ஜடேஜா, தினேஷ் கார்த்திக் - யார் யாருக்கு வாய்ப்பு?
இந்திய அணியைப் பொறுத்தவரை பங்களாதேஷூக்கு எதிரான போட்டியில் நிச்சயம் சில மாற்றங்கள் இருக்கும் எனத் தெரிகிறது. கேதர் ஜாதவை அணியில் இருந்து நீக்கும் பட்சத்தில் அவருக்குப் பதிலாக தினேஷ் கார்த்திக் அல்லது ரவீந்திர ஜடேஜா ஆகிய இருவரில் ஒருவரை சேர்க்க வாய்ப்புள்ளது. சாஹல் அல்லது குல்தீப் இருவரில் ஒருவர் நீக்கப்படும் பட்சத்தில் ஜடேஜாவுக்கு நிச்சயம் கிடைக்கும். கே.எல்.ராகுல் விளையாடாத பட்சத்தில் அவருக்குப் பதிலாக யாரேனும் தொடக்க வீரராக விளையாட வேண்டும். மயங்க் அகர்வாலுக்கு உடனடியாக வாய்ப்பு கிடைக்குமா என்பது தெரியவில்லை.
ஈஎஸ்பிஎன் கிரிக்கெட் தளத்தில் இந்திய அணியில் யார் யாரெல்லாம் புதிதாக இடம்பெறுவார்கள் என ஒரு கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. அதற்குப் பலரும் 11 பேர் கொண்ட அணி பட்டியலை பதிவிட்டுள்ளனர். அதில், பெரும்பாலும் ஜடேஜா, தினேஷ் கார்த்திக் பெயர்களே இடம்பெற்றுள்ளன.
காயம் சரியாகும் பட்சத்தில் முகமது ஷமிக்கு பதிலாக மீண்டும் புவனேஸ்வர் குமார் களமிறங்க வாய்ப்புள்ளது. இருப்பினும், கேப்டன் விராட் கோலியும், பயிற்சியாளர்களும் என்ன திட்டம் வைத்திருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.