விளையாட்டு

150 ரன்களுக்கு சுருண்ட பங்களாதேஷ் - இந்திய அணி நிதான ஆட்டம்

150 ரன்களுக்கு சுருண்ட பங்களாதேஷ் - இந்திய அணி நிதான ஆட்டம்

webteam

பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 86 ரன்கள் சேர்த்துள்ளது. 

இந்தியா-பங்களாதேஷ் அணிகள் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று இந்தூரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து முதலில் ஆடிய பங்களாதேஷ் அணி 58.3 ஓவர்களில் 150 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது. 

பங்களாதேஷ் அணி சார்பில் முஸ்பிகூர் அதிகபட்சமாக 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய முகமது ஷமி 3 விக்கெட்களை வீழ்த்தினார். இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் மற்றும் அஸ்வின் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

இதனையடுத்து முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய இந்திய அணியில், தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 6 ரன்கள் எடுத்திருந்த போது அபு ஜெயத் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து மாயங்க் அகர்வால் மற்றும் புஜாரா ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்க்க ஆரம்பித்தனர். முதல்நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 1 ஒரு விக்கெட் இழப்பிற்கு 86 ரன்களை எடுத்துள்ளது. புஜாரா 43 ரன்களுடனும், மாயங்க் அகர்வால் 37 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இதன்மூலம் இந்திய அணி பங்களாதேஷ் அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட 64 ரன்கள் பின் தங்கியுள்ளது.