இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் முதல் ஒரு நாள் போட்டி, ஐதராபாத்தில் இன்று நடக்கிறது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு டி20 போட்டி, 5 ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிக ளுக்கு இடையிலான டி20 தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றிவிட்டது. இப்போது ஒரு நாள் போட்டித் தொடர் நடக்க இருக்கிறது. முத லாவது ஒரு நாள் போட்டி ஐதராபாத்தில் இன்று நடக்கிறது. பகலிரவு ஆட்டமாக நடைபெறும் இந்தப் போட்டி, பிற்பகல் ஒன்றரை மணிக்குத் தொடங்குகிறது.
டி20 தொடரை ஆஸ்திரேலியாவிடம் இழந்த இந்திய அணி, ஒரு நாள் தொடரில் பதிலடி கொடுக்கும் வேகத்துடன் களம் இறங்குகிறது. இந்திய அணியின் பேட்டிங் வரிசை பலமாக இருந்தாலும் சில நேரங்களில் சொதப்பி விடுகிறார்கள். தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மாவும் ஷிகர் தவானும் வலுவான தொடக்கம் அமைத்து கொடுப்பது அவசியம். நேற்று பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தோனி, காயம் அடைந் ததால், அவர் இன்று ஆடுவது சந்தேகமே. அவர் ஆடவில்லை என்றால் ரிஷாப் பன்ட் விக்கெட் கீப்பிங்கை கவனிப்பார் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஆகியோர் அணிக்கு திரும்பி இருக்கின்றன. இது இந்திய அணிக்கு பலமாக இருக்கும்.
டி20 தொடரை கைப்பற்றியுள்ளதால் ஆஸ்திரேலிய அணி நம்பிக்கையுடன் இருக்கிறது. மேக்ஸ்வெல்லின் சிறப்பான ஃபார்ம் அவர்களுக்கு இன்னும் அதிக நம்பிக்கையை கொடுக்கும். கேப்டன் ஆரோன் பின்ச் தடுமாறி வருவது விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது. கடைசி 7 ஒரு நாள் போட்டிகளில் அவர் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. இந்திய சுழல்கள், சேஹல், குல்தீப் யாதவ், பகுதி நேர பந்துவீச்சாளர் கேதர் ஜாதவ் ஆகியோர் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு கடும் சவாலை கொடுப்பார்கள். ஆட்டத்தை வெற்றியுடன் தொடங்க வேண்டும் என்று இரு அணிகளும் நினைப்பதால் இன்றைய போட்டியில் அனல் பறக்கலாம்.
போட்டி நடக்கும் ஐதராபாத் ராஜீவ்காந்தி ஸ்டேடியம் பேட்டிங்கிற்கு சாதகமானது. இதுவரை இங்கு நடந்துள்ள 5 போட்டிகளில் இந்திய அணி 2 வெற்றி மட்டுமே பெற்றிருக்கிறது. ஆஸ்திரேலியா இங்கு ஆடிய இரண்டு ஆட்டங்களிலும் இந்தியாவை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன்னோட்டமாக, இந்த கிரிக்கெட் தொடர் பார்க்கப்படுகிறது. இதில் சிறப்பாக விளையாடும் வீரர்கள், உலகக் கோப்பைக்கான அணியில் தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளதால், இந்தத் தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.