ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தில் முதுகு வலியின் காரணத்தால் ஸ்ரேயாஸ் ஐயர் ஸ்கேன் எடுப்பதற்காக அனுப்பப்பட்டுள்ளார்.
குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 480 ரன்கள் குவித்தது. தொடர்ந்து இந்திய அணி முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. நான்காம் நாள் ஆட்டத்தை விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா இன்று தொடங்கினர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஜடேஜா 28 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.
ஜடேஜாவுக்குப் பிறகு ஸ்ரேயஸ் ஐயர் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது இடத்தில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ஸ்ரீகர் பரத் களமிறங்கினார். இதையடுத்து ஸ்ரேயாஸ் ஐயர் எங்கே? என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பினர்.
ஸ்ரேயாஸ் ஐயருக்கு முதுகு பகுதியில் வலி ஏற்பட்ட காரணத்தால் அவர் பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளதாகவும், அவரை பிசிசிஐ மருத்துவக் குழுவினர் பரிசோதித்து வருவதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை முதுகு வலி காரணமாக ஸ்ரேயாஸ் ஐயர் தவற விட்டிருந்தார். அதற்கு முன்னர் நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை அவர் முதுகு வலி காரணமாக ஸ்ரேயாஸ் தவறவிட்டார். இந்நிலையில், மீண்டும் முதுகு வலி பாதிப்புக்கு அவர் ஆளாகி உள்ளார். இது இந்திய அணி வீரர்களின் உடற்தகுதி திறன் குறித்த கேள்வியை எழுப்புகிறது.
இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 419 ரன்கள் குவித்துள்ளது. சதம் அடித்துள்ள விராட் கோலி 110 ரன்கள் மற்றும் அக்சார் படேல் 25 ரன்கள் எடுத்து விளையாடி வருகின்றனர்.