விளையாட்டு

7 விக்கெட்டுகளை கழற்றிய மர்ஃபி.. ஆனாலும், 400 ரன்கள் குவித்த இந்தியா -223 ரன்கள் முன்னிலை

7 விக்கெட்டுகளை கழற்றிய மர்ஃபி.. ஆனாலும், 400 ரன்கள் குவித்த இந்தியா -223 ரன்கள் முன்னிலை

சங்கீதா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி ஜடேஜா, அக்சர் பட்டேலின் அபார ஆட்டத்தால், 400 ரன்கள் குவித்து ஆட்டமிழந்துள்ளது. இதன்மூலம் 223 ரன்கள் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரானது, நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் மைதானத்தில், கடந்த 9-ம் தேதி காலை 9.30 மணிக்கு துவங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்ததை அடுத்து, இந்திய அணி பீல்டிங் செய்தது.

அதன்படி, ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கில் களமிறங்கிய நிலையில், இந்திய சுழற்பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல், அந்த அணி முதல் இன்னிங்சில் 63.7 ஓவர்களில் 177 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் எடுத்திருந்தனர். அதிகபட்சமாக ஆஸ்திரேலிய அணியில் மார்னஸ் 49 ரன்களும், ஸ்மித் 37 ரன்களும் எடுத்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து முதல் நாளிலேயே இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணியில் பார்மில் இருந்த சுப்மன் கில்லுக்குப் பதிலாக கே.எல். ராகுல் சேர்க்கப்பட்டிருந்தார். ரிஷப் பந்த் இல்லாததால், சூர்யகுமார் யாதவ் டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கி இருந்தார். எனினும் முதல் நாள் ஆட்ட முடிவில் 24 ஓவர்கள் முடிவுற்ற நிலையில், முதல் இன்னிங்சில் 1 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 77 ரன்கள் எடுத்திருந்தது. ரோகித் சர்மா 56 ரன்களும், அஸ்வின் ரன் எதுவும் எடுக்காமல் களத்தில் இருந்தார்.

இதனைத் தொடர்ந்து நேற்று துவங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில், அஸ்வின் 23 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டாக, பின்னர் வந்த சீனியர் வீரர்கள் புஜாரா (7), விராட் கோலி (12), சூர்ய குமார் யாதவ் (8), பரத் (8) ஆகியோர், ஆஸ்திரேலியாவின் அறிமுக வீரர் டாட் முர்ஃபியின் அபார பந்துவீச்சில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதில் சூர்ய குமார் யாதவின் விக்கெட்டை நாதன் லயன் எடுத்திருந்தார். எனினும் மறுபக்கம் கேப்டன் ரோகித் சர்மா நங்கூரமாய் நின்றிருந்தார். நேற்று அவர் 9-வது சதம் அடித்தார்.

மேலும் ரோகித் சர்மாவுடன் துணையாக நின்ற ரவீந்திர ஜடேஜாவும் அரைசதம் அடித்தார். பின்னர் ரோகித் சர்மா 120 ரன்கள் எடுத்து அவுட்டாக, அதன்பிறகு கூட்டணி அமைத்த ஜடேஜா மற்றும் அக்சர் பட்டேலும் நிலைத்து நின்றனர். அவரும் அரைசதம் அடிக்க இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. 114 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 321 ரன்கள் இந்திய அணி எடுத்திருந்தது. 144 ரன்கள் முன்னிலையுடன் ஜடேஜா 66 ரன்களும், அட்ஷர் பட்டேல் 52 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதனைத் தொடர்ந்து இன்று 3-வது நாள் ஆட்டம் துவங்கியது.

இதில் 4 ரன்கள் எடுத்த நிலையில், ஜடேஜா முர்ஃபி பந்து வீச்சில் அவுட்டாக, அக்சர் பட்டேலுடன், ஷமி கைக்கோர்த்தார். இவர்கள் இருவரும் நின்று விளையாடிய நிலையில், 84 ரன்களுக்கு அக்ஷர் பட்டேல் ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து முகமது சிராஜ் களமிறங்கிய நிலையில், ஷமி 37 ரன்களுக்கு அலெக்ஸ் கேரியிடம் கேட்ச் கொடுத்து முர்ஃபி பந்துவீச்சில் அவுட்டாக முதல் செஷனில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 400 ரன்கள் குவித்தது. இதன்மூலம் இந்திய அணி223 ரன்கள் முன்னிலை வகிக்கிறது. ஆஸ்திரேலிய தரப்பில் டாட் முர்ஃபி 7 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். கேப்டன் பேட் கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

இதையடுத்து மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 2-வது ஓவரிலேயே 7 ரன்கள் எடுத்த நிலையில், துவக்க ஆட்டக்காரர் உஸ்மான் அஷ்வின் பந்துவீச்சில் விராட் கோலியிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். இந்தத் தொடரில் இந்திய அணி 3-1 என்றக் கணக்கில் ஆஸ்திரேலியாவை வென்றால்தான், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியை எட்ட முடியும் என்பதால் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.