விளையாட்டு

இந்தியா அபார வெற்றி - ஆஸ்திரேலியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது

இந்தியா அபார வெற்றி - ஆஸ்திரேலியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது

webteam

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியை எளிமையாக வென்று இந்தியா கோப்பையை கைப்பற்றியது.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியில் களமிறங்கிய தொடக்க வீரர்களான டேவிட் வார்னர் 3 (7) ரன்களில் விக்கெட்டை பறிகொடுக்க, கேப்டன் ஆரோன் ஃபின்ச் 19 (26) ரன்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்து அரை சதம் அடித்த மார்னஸ் 54 (64) ரன்களில் அவுட் ஆனார். தொடர்ந்து விளையாடிய ஸ்மித், 131 (132) ரன்கள் எடுத்து வெளியேறினார். 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 286 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் முகமது ஷமி 4 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான கே.எல். ராகுல் 19 (27) ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் மற்றொரு புறம் கேப்டன் விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்த ரோகித் சர்மா சதம் அடித்தார். 119 (128) ரன்களில் ரோகித் விக்கெட்டை இழக்க, பின்னர் வந்த ஸ்ரேயாஸ் ஐயருடன் கைகோர்த்த கோலி 89 (91) ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். இறுதிவரை ஆட்டமிழக்காத ஸ்ரேயாஸ் 35 பந்துகளில் 44 ரன்கள் விளாசினார். 47.3 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 289 ரன்கள் எடுத்து இலக்கை எட்டியது.

இதன்மூலம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது. ஏற்கனவே முதல் போட்டியை இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்ற நிலையில், அடுத்த இரண்டு போட்டிகளிலும் அபார வெற்றி பெற்று ஆஸ்திரேலியாவிற்கு பதிலடி கொடுத்திருக்கிறது.