விளையாட்டு

இந்தியாவை ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா - 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசுர வெற்றி

இந்தியாவை ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா - 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசுர வெற்றி

webteam

இந்தியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபாரமாக வென்றது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டி மும்பையில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதனால் முதல் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் ரோகித் ஷர்மா 10 (15) ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ஷிகர் தவான் 47 (61) மற்றும் லோகேஷ் ராகுல் 74 (91) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 49.1 ஓவர்களில் 255 ரன்கள் எடுத்து இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலிய அணியில் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களான டேவிட் வார்னர் மற்றும் ஆரோன் ஃபின்ச் ஆகியோர் ஆரம்பம் முதலே விக்கெட்டை இழக்காமல் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஒரு கட்டத்திற்கு மேல், இந்திய அணியின் பந்துவீச்சை இருவரும் நாலாபுறமும் சிதறடித்தனர்.

இந்திய பவுலர்கள் எவ்வளவு முயன்றும் ஒரு விக்கெட்டை கூட கைப்பற்ற முடியவில்லை. இறுதிவரையில் விக்கெட்டை இழக்காத இருவரும் சதம் அடித்ததுடன், 37.4 ஓவர்களில் 258 ரன்கள் எடுத்து இலக்கை எட்டினர். இதனால் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. போட்டியின் நாயகனாக 128 (112) ரன்கள் குவித்த வார்னர் தேர்வு செய்யப்பட்டார்.