விளையாட்டு

நடுவரிடம் ஆக்ரோஷமான முறையீடு - விராட் கோலிக்கு அபராதம்

நடுவரிடம் ஆக்ரோஷமான முறையீடு - விராட் கோலிக்கு அபராதம்

rajakannan

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நடுவரிடம் ஆக்ரோஷமாக முறையிட்டதால் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி சவுதாம்ப்டன் நகரில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 224 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர், ஆப்கான் அணி 225 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடியது. 

அப்போது, முகமது சமி வீசிய மூன்றாவது ஓவரின் நான்காவது பந்தில் எல்.பி.டபிள்யூ கேட்கப்பட்டது. நடுவர் கொடுக்காத நிலையில், கேப்டன் விராட் கோலி ரிவிவ்யூ கேட்டார். மூன்றாம் நடுவரிடம் சென்ற போது அல்ட்ரா எட்ஜில் பார்க்கப்பட்டது. பந்து பேட்டில் படவில்லை. இருந்த போதும், பந்து மைதானத்தில் நடுகள கோட்டிற்கு வெளியே குத்தியதாக கூறி அவுட் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. 

ஆனால், பந்து பாதி லைனிலும், பாதில் உள்ளேயும் பட்டது தெளிவாக தெரிந்தது. அதனால், அவுட் இல்லை என்றால் ரிவிவ்யூ ஏன் திரும்ப வழங்கப்படவில்லை என நடுவரிடம் விராட் கோலி கேட்டார். நடுவர் அவரிடம் விளக்கம் அளித்தார். அதனை ஏற்க மறுத்து மீண்டும் மீண்டும் அவர் தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

அதேபோல், பும்ரா வீசிய 29வது ஓவரில் ரஹ்மட் ஷாவுக்கும் இதேபோல் எல்.பி.டபிள்யூ விக்கெட் கேட்கப்பட்டது. ஆனால், நடுவர் கொடுக்கவில்லை. அதிருப்தி அடைந்த கோலி நடுவரிடம் முறையிட்டார். அப்போது, இந்திய அணிக்கு ரிவிவ்யூ கூட இல்லை. ஏற்கனவே சமி ஓவரில் ரிவிவ்யூ இழந்துவிட்டது இந்தியா. விராட் கோலி நடுவரிடம் முறையிட்ட வீடியோ மற்றும் படங்கள் நேற்று சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்நிலையில், நடுவரிடம் ஆக்ரோஷமாக முறையிட்டதற்காக விராட் கோலிக்கு ஐசிசி அபராதம் சார்பில் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, லெவன் 1 விதிமீறலுக்காக அவரது சம்பளத்தில் 25 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு இந்த விதிமுறை கொண்டு வந்தது முதல், இதுவரை விராட் கோலிக்கு இரண்டாவது முறையாக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பும்ரா ஓவரில் நடுவரிடம் முறையிட்டதற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.