நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து - இந்தியா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 5-ம் தேதி ஹாமில்டனில் தொடங்குகிறது. 2-வது போட்டி ஆக்லாந்தில் 8-ம் தேதியும், 3-வது போட்டி மவுண்ட் மவுங்கானுயில் 11-ம் தேதியும் நடைபெற உள்ளது. அதன்பின் முதல் டெஸ்ட் வெலிங்டனில் 21ம் தேதியும், 2-வது டெஸ்ட் கிறிஸ்ட்சர்ச்சில் 29ம் தேதியும் நடைபெற உள்ளன.
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. தசைப்பிடிப்பு காரணமாக அவதிப்பட்டு வந்த ரோகித் முழுமையாக குணமடையாததால் போட்டிகளில் இருந்து அவர் விலகியுள்ளார். இது குறித்து ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ள பிசிசிஐ, ''நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டி தொடர்களில் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்படுகிறது. ஒருநாள் போட்டிகளில் அவருக்கு பதிலாக மயங்க் அகர்வால் களமிறங்குவார்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கி தடை முடிந்து வந்துள்ள இளம் வீரர் பிரித்வி ஷா மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். அதேபோல், ஹனுமன் விஹாரி, சுப்மன் கில் ஆகிய இளம் பேட்ஸ்மேன்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. விரித்திமன் சாஹா, ரிஷப் பண்ட் ஆகிய இரண்டு விக்கெட் கீப்பர்கள் உள்ளனர். நவ்தீவ் சனிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அஸ்வின் அணியில் இடம்பெற்றுள்ளார்.
அணி விவரம்:
விராட் கோலி
மயங்க் அகர்வால்
பிரித்வி ஷா
சுப்மன் கில்
அஜங்கியா ரகானே
ஹனுமன் விஹாரி
விரித்திமன் சாஹா
ரிஷப் பண்ட்
ரவிசந்திர அஸ்வின்
ரவீந்திர ஜடேஜா
ஜஸ்பிரிட் பும்ரா
உமேஷ் யாதவ்
முகமது சமி
நவ்தீப் சைனி
இஷாந்த் சர்மா