விளையாட்டு

தொடரிலிருந்து விலகிய பும்ரா... வெற்றியை தொடர்ந்து தக்கவைக்குமா இந்திய அணி?

தொடரிலிருந்து விலகிய பும்ரா... வெற்றியை தொடர்ந்து தக்கவைக்குமா இந்திய அணி?

Rishan Vengai

இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று கவுகாத்தி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்குபெற்று விளையாடிவருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான இருபது ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இதனையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி கவுகாத்தியில் உள்ள மைதானத்தில் இன்று மதியம் நடைபெறவுள்ளது.

டி20 தொடரை கைப்பற்றிய நிலையில் ஒருநாள் தொடரையும் வெல்லும் முனைப்பில் இந்தியா களமிறங்குகிறது. இந்திய மண்ணில் ஒருநாள் தொடரை வென்றதே இல்லை என்ற மோசமான சாதனைக்கு முடிவுகட்டும் திட்டத்துடன் இலங்கை அணி களமிறங்க உள்ளது.

ஒருநாள் தொடரிலிருந்து விலகியிருக்கும் பும்ரா!

இந்திய அணியில் மூத்த வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல் ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர். உடல்தகுதியை எட்டியதாக அணியில் சேர்க்கப்பட்ட பும்ரா மீண்டும் விலக்கப்பட்டுள்ளார். ஒரு போட்டியில் தான் விலகுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் தொடரிலிருந்தே வெளியேறி இருக்கிறார் பும்ரா.

எதிர்வரும் ஒருநாள் உலகக்கோப்பையை முன்னிட்டு, அதில் விளையாடப்போகும் 11 இந்திய அணி வீரர்களும், எதிர்வரும் அனைத்து போட்டிகளிலும் ஒன்றாகத்தான் விளையாடுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், பும்ரா விலகியிருப்பது அணிக்கு பாதகமாகவே பார்க்கப்படுகிறது.

மைதானத்தில் பாம்பு விரட்டி ரசாயனம் தெளிப்பு!

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டிக்கு முன்னதாக, போட்டி நடைபெறும் அசாமின் கவுகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் பாம்பு விரட்டிகளை அமைப்பாளர்கள் பயன்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதுகுறித்து தெரிவித்திருக்கும் அசாம் கிரிக்கெட் சங்கத்தின் (ஏசிஏ) தலைவர் தரங்கா கோகோய், "கொசுக்கள் வராமல் இருக்க ஃபோகிங் செய்வதுடன், ஸ்டேடியம் மற்றும் வளாகத்திற்கு சுற்றிலும் பாம்பு எதிர்ப்பு ரசாயனங்களையும் தெளிக்கிறோம்" என்றுள்ளார்.