விளையாட்டு

நியூசிலாந்து வெற்றி பெற 180 ரன்களை இலக்காக நிர்ணயித்த இந்தியா

நியூசிலாந்து வெற்றி பெற 180 ரன்களை இலக்காக நிர்ணயித்த இந்தியா

jagadeesh

ஹாமில்டனில் நடைபெற்று வரும் மூன்றாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற 180 ரன்களை இலக்காக இந்தியா நிர்ணயித்துள்ளது.

இந்திய அணி நியூசிலாந்து நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தத் தொடரில் 5 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் மோதுகின்றன. ஆக்லாந்தில் நடைபெற்ற முதல் இரண்டு டி20 போட்டிகளில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்தார். இதனையடுத்து இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் இருந்து அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா 24 பந்துகளில் அரை சதம் கடந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான கே.எல்.ராகுலும் நிதானமாகவும் அதேசமயம் அதிரடியாகவும் ரன்களை சேர்த்து ஆடினார். பின்னர் கே.எல்.ராகுல் 27 ரன்களில் ஆட்டமிழந்தார். ரோகித் சர்மா 40 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த வந்த ஷிவம் துபே 3 ரன்களில் வெளியேறினார்.

இதனையடுத்து கேப்டன் விராட் கோலி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சிறப்பாக ரன்களை சேர்த்தார். ஆனால் அவரால் இறுதி வரை விளையாட முடியவில்லை. இறுதியாக 27 பந்துகளில் 38 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். 20 ஓவர் முடிவில் இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்களை குவித்தது. நியூசிலாந்து தரப்பில் பென்னட் இந்தியாவின் மூன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார்.