விளையாட்டு

ஓவர் முடிஞ்சதா இல்லையா..! இங்கிலாந்து வீரர்களை கலகலப்பாக்கிய ரிஷப் பண்ட்

ஓவர் முடிஞ்சதா இல்லையா..! இங்கிலாந்து வீரர்களை கலகலப்பாக்கிய ரிஷப் பண்ட்

jagadeesh

சென்னையில் நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 300 ரன்கள் எடுத்தது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று 2ஆவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா படுதோல்வியடைந்த நிலையில் மிகவும் எதிர்பார்ப்புடன் 2ஆவது போட்டி நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்ந்தெடுத்தார். இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் தொடக்க ஆட்டக்காரரான சுப்மன் கில் டக் அவுட்டானார்.

இதனையடுத்து ரோகித்துடன் இணைந்து புஜாரா ஜோடி அற்புதமாக விளையாடியது. இந்த ஜோடி அருமையான பார்ட்னர்ஷிப் அமைத்தது. களத்தில் தொடர்ந்து நின்று சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட புஜாரா 21 ரன்களில் ஜாக் லீச் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஆனால் யார் அவுட்டானால் என்ன என பிரமாதமாக விளையாடிய ரோகித் அரை சதம் கடந்தார். இதனிடையே கேப்டன் விராட் கோலி மொயின் அலி பந்துவீச்சில் டக்அவுட்டாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார்.

இந்திய அணி உணவு இடைவேளை வரை 3 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்தது. ரோகித் சர்மா 80 ரன்களுடனும், ரஹானே 5 ரன்களுடன் களத்தில் இருந்தனர். உணவு இடைவேளைக்கு பின்பு ஆட வந்த இருவரும் அட்டகாசமான பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடினார்கள். இதில் பல கிளாசான ஷாட்டுகளை ரஹானே விளையாடினார். தொடர்ந்து சீரான வேகத்தில் ரன்களைச் சேர்த்த ரோகித் சர்மா சதமடித்தார். இதே போல ரஹானேவும் சிறப்பாக விளையாடினார்.

இந்த இரு பேட்ஸ்மேன்களால் இந்தியா தேநீர் இடைவேளை வரை 3 விக்கெட் இழப்புக்கு 189 ரன்களை எடுத்தது. இதில் ரோகித் சர்மா 132 ரன்களுடனும், ரஹானே 36 ரன்களுடனும் களத்தில் இருந்தார்கள். தேநீர் இடைவேளைக்கு பின்பு தொடர்ந்து விளையாடிய இருவரும் சீரான வேகத்தில் ரன்களை சேர்த்தனர். நிதானமாக கிளாசாக விளையாடிய ரஹானே அரை சதமடித்தார்.

இந்தியாவும் 200 ரன்களை கடந்தது. சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா 150 ரன்களை எட்டினார். இந்திய அணி வலுவான ஸ்கோரை நோக்கி போகும் நேரத்தில் ரோகித் சர்மா 161 ரன்களுக்கு அவுட்டானார். இதனையடுத்து ரஹானேவும் 67 ரன்கள் எடுத்திருந்தபோது மொயின் அலி சுழற்பந்தில் போல்டாகி வெளியேறினார். இதைத் தொடர்ந்து அஸ்வினும் 13 ரன்களில் அவுட்டானார். ரிஷப் பன்ட் வழக்கம்போல தனது அதிரடி பேட்டிங்கை தொடர்ந்தார். இதனையடுத்து முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 300 ரன்களை சேர்த்துள்ளது. ரிஷப் பண்ட் 33 ரன்களுடனும், அக்ஸர் பட்டேல் 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் சுவாரஸ்யமான நிகழ்வு ஒன்றும் நடந்தது. 87 ஓவர்கள் வீசப்பட நிலையில், 5 மணி ஆகிவிட்டதால் ஆட்டம் முடிந்துவிட்டதாக என ரிஷப் பண்ட் கேட்டுள்ளார். அப்போது, அம்பயர் மற்றும் இங்கிலாந்து வீரர்கள் ரிஷப் பண்ட் இடம் பேசினார்கள். குறிப்பாக, பென் ஸ்டோக்ஸ் ரிஷப்பிடம் கலகலப்பாக பேசினார். பின்னர் மேற்கொண்டு ஒரு ஓவர் வீசப்பட்டது. 88 ஓவர்களுடன் முதல் நாள் ஆட்டம் முடிந்தது.