விளையாட்டு

3வது டெஸ்டிலும் இந்தியா அபார வெற்றி: இலங்கை மண்ணில் சாதனை

webteam

இலங்கையுடனான 3-வது டெஸ்ட் போட்டியில், இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 171 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வெளிநாட்டு மண்ணில் முதல் முறையாக அனைத்துப்போட்டிகளிலும் வெற்றிபெற்ற அணி என்கிற சாதனை படைத்துள்ளது.

இந்தியா- இலங்கை அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பல்லேகலேவில் நடைபெற்றது.  இந்தியா முதல் இன்னிங்சில் 487 ரன் குவித்தது. இந்திய வீரர்களின் அபாரமான பந்துவீச்சால் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 135 ரன்களை மட்டுமே எடுத்து ‘பாலோஆன்’ ஆனது. 352 ரன்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை அணி 2-வது இன்னிங்சை தொடர்ந்து விளையாடியது. நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் அந்த அணி 1 விக்கெட் இழப்புக்கு 19 ரன் எடுத்து இருந்தது. 3 வது நாளான இன்று இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க 333 ரன் தேவை என்கிற நிலையில் இலங்கை அணி தொடர்ந்து விளையாடியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் இலங்கையின் 2-வது விக்கெட் விழுந்தது. கருணாரத்னே 16 ரன்னில் அஸ்வின் பந்தில் ஆட்டம் இழந்தார். அதனைத் தொடர்ந்து பிஷ்பக்குமாரா, குஷால் மெண்டீஸ் ஆகியோர் அடுத்தடுத்து சமி வீசிய பந்துகளில் ஆட்டம் இழந்தனர்.

இறுதியில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 181 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால், இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 171 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தியா தரப்பில், அஸ்வின் 4 விக்கெட் கைப்பற்றினார். ஷமி 3 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன் மூலம் இலங்கை அணி 0-3 என்ற கணக்கில், சொந்த மண்ணில் தோல்வி அடைந்தது. முதல் டெஸ்டில் 304 ரன் வித்தியாசத்திலும், 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 53 ரன் வித்தியாசத்திலும், 3-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 171 ரன்கள் வித்தியாசத்திலும் வென்று இந்தியா தொடரை கைப்பற்றிது. இதன் மூலம் அயல்நாட்டில் நடந்த டெஸ்ட் தொடரின் அனைத்துப் போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றது இதுவே முதல்முறை.