விளையாட்டு

வீறுநடை போடும் இந்தியாவின் துப்பாக்கிச் சுடுதல் பயணம்

வீறுநடை போடும் இந்தியாவின் துப்பாக்கிச் சுடுதல் பயணம்

webteam

துப்பாக்கி சுடுதல் போட்டியில் 2004இல் மத்திய அமைச்சர் ராஜவர்தன் சிங் ரத்தோர் வெள்ளி பதக்கம் முதல் 2019 சவுரவ் சவுதாரி வரை இந்தியாவின் சிறப்பான துப்பாக்கி சுடுதல் பயணம்.

இந்தியாவில் விளையாட்டு என்றாலே அதிக பேருக்கு நினைவுக்கு வருவது கிரிக்கெட் தான். காரணம் 1983 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி ஜாம்பவான்கள் நிறைந்த மேற்கிந்திய தீவுகள் அணியை தோற்கடித்து உலகக் கோப்பையை வென்றது. அன்று முதல் இந்தியாவில் கிரிக்கெட்டிற்கு ஏறுமுகம் தான். அதன்பிறகு பட்டி தொட்டி எங்கும் கிரிக்கெட் பரவியது. ஆனாலும் ஒரு சில விளையாட்டுகள் தனது தாக்கத்தை ஏற்படுத்த ஆரம்பித்தன. அவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்திய விளையாட்டுகளில் ஒன்று துப்பாக்கி சுடுதல் போட்டி.

(ராஜவர்தன் சிங் ரத்தோர்)

இந்தியாவில் துப்பாக்கி சுடுதல் ஆரம்ப காலங்களில் மிகவும் குறைந்த தாக்கத்தையே ஏற்படுத்திவந்தது. உதாரணமாக இந்திய 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் தான் துப்பாக்கி சுடுதலில் முதல் முறையாக பதக்கம் வென்றது. 2004 ஒலிம்பிக் போட்டியில் ராஜியவர்தன் சிங் ரத்தோர் முதல் முறையாக டபுள் டிராப் துப்பாக்கி சுடுதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதனையடுத்து 2008ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக்கில் 10மீட்டர் ஏர் ரைஃபில் பிரிவில் அபினவ் பிந்தரா தங்கப்பதக்கம் வென்றார். இது ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியாவின் முதல் தனி நபர் தங்கப் பதக்கமாகும். ஏனென்றால் இதற்கு முன் இந்தியா ஒலிம்பிக் வரலாற்றில் ஹாக்கி போட்டியில் மட்டும் தான் 8 தங்கப் பதக்கங்களை வென்றிருந்தது. இந்த ஒலிம்பிக் தங்கம் தான் இந்தியாவில் துப்பாக்கி சுடுதலின் ஏறுமுகத்திற்கு அச்சாணியாக அமைந்தது.

(அபினவ் பிந்தரா)

அதன்பின்னர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் உலக அரங்கில் இந்தியா ஒரு அசைக்க முடியாத சக்தியாக உருவேடுத்தது. அதாவது அதற்குபின் நடந்த காமென்வெல்த் போட்டிகள், ஆசிய போட்டிகள் மற்றும் துப்பாக்கி சுடுதலின் உலககோப்பை போட்டிகள் ஆகியவற்றில் இந்தியா பலம் வாய்ந்த ஒன்றாக அமைந்தது. இவர்கள் இருவரை தொடர்ந்து விஜய் குமார் 2012 ஒலிம்பிக்கில் 25 மீட்டர் ரப்பீட் ஃபையர் பிஸ்டல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். அதே ஆண்டில் ஒலிம்பிக் போட்டியில் ககன் நராங் 10 மீட்டர் ஏர் ரைஃபில் பிரிவில் வெண்கல பதக்கம் வென்றார். 

(சவுரவ் சவுதாரி)

அத்துடன் நின்றுவிட வில்லை. துப்பாக்கி சுடுதலில் இந்திய ஆண்களின் பயணம் தொடர்ந்து கொண்டுதான் வந்தது. மானவ்ஜீத் சந்து, ஜீத்து ராய் எனப் பட்டியல் நீண்டுகொண்டே போனது. அந்த வரிசையில் தற்போது புதிதாக இணைந்துள்ளார் இளம் சவுரவ் சவுதாரி. 16 வயதேயான இவர் துப்பாக்கி சுடுதல் உலகக் கோப்பை போட்டியில் உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். அத்துடன் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளார்.

(அஞ்சலி பக்வத்)

அதேபோல, துப்பாக்கி சுடுதலில் ஆண்களுக்கு இணையாக இந்திய பெண்களும் அதிகம் சாதித்துள்ளனர். குறிப்பாக அஞ்சலி பக்வத் 2002 ஆம் ஆண்டு சர்வதேச துபாக்கி சுடுதல் கூட்டமைப்பின் சாம்பியன்ஸ் ஆஃப் சாம்பியன்ஸ் பட்டம் வென்ற ஒரே இந்தியர் என்ற பெருமையை பெற்றார். அதற்குபிறகு அஞ்சலி பக்வத் துப்பாக்கி சுடுதலில் பல பெண்கள் சாதிக்க ஒரு நல்ல முன்னோடியாக இருந்தார். இவரைத் தொடர்ந்து ஹீனா சித்து 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் அசத்தினார். 

(ஹீனா சித்து)

2013ல் துப்பாக்கி சுடுதல் உலகக் கோப்பையில் பிஸ்டல் பிரிவில் இந்தியா சார்பில் முதல் தங்கப் பதக்கத்தை வென்றார் ஹீனா சித்து. இவரைத் தொடர்ந்து தற்போது இரண்டு புதிய பெண் நட்சத்திரங்கள் துப்பாக்கி சுடுதலில் வலம் வருகின்றனர். அவர்களில் ஒருவர் 17 வயதேயான மனு பேக்கர். இவர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் 2016 ஆம் ஆண்டு உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் தங்கப் பதக்கம் வென்றார். அத்துடன் 2018ஆம் ஆண்டில் நடந்த இளைஞர்களுக்கான ஒலிம்பிக்கிலும் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். அவர்களில் மற்றொருவர் 19 வயதேயான அபூர்வி சந்தேலா. அபூர்வி சந்தேலா தற்போது நடந்துள்ள உலகக் கோப்பையில் 10 மீட்டர் ஏர் ரைஃபில் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

(அபூர்வி சந்தேலா)

இவ்வாறு துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் பயணம் நீண்டு நெடியதாக தொடர்ந்து வருகிறது.