asian games pt web
விளையாட்டு

ஆசிய விளையாட்டுப் போட்டி: பதக்கங்களைக் குவித்து இந்தியா வரலாற்று சாதனை...!

ஆசிய விளையாட்டு போட்டிகளில் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் அதிக பதக்கங்களை இந்தியா குவித்துள்ளது.

PT WEB

சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், இந்திய வீரர் வீராங்கனைகள் பதக்கங்களை குவித்து வருகின்றனர்.

ஈட்டி எறிதல் பிரிவில் நீரஜ் சோப்ரா 88.8 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கத்தையும், ஜனா கிஷோர் குமார் 87.54 மீட்டர் எறிந்து வெள்ளிப் பதக்கத்தையும் கைப்பற்றினர். 4 X 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்திய ஆண்கள் அணி தங்கமும், மகளிர் அணி வெள்ளி பதக்கத்தையும் வென்றது.

5,000 மீட்டர் ஓட்டத்தில் அவினாஷ் சாப்ளே வெள்ளிப் பதக்கம் வென்றார். ஆடவர் ஹாக்கி இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதிப் பெற்று பதக்கத்தை உறுதி செய்துள்ளது.

இப்படியாக 18 தங்கம், 31 வெள்ளி, 32 வெண்கலம் என 81 பதக்கங்களை இந்தியா இதுவரை கைப்பற்றியுள்ளது. ஆசிய விளையாட்டு போட்டி வரலாற்றில் இதுவரை இந்தியா 75 பதக்கங்களையே அதிகபட்சமாக பெற்ற நிலையில், இம்முறை அதைவிட அதிக பதக்கங்களை குவித்து வருகிறது.

இதுகுறித்து பிரதமர் மோடி, “ஆசியப் போட்டிகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தியா சிறப்பாக செயல்பட்டுள்ளது. தேசத்திற்கு பெருமைமிகு தருணம். வீரர் வீராங்கனைகளுக்கு வாழ்த்துகள்” என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது ஒருபுறமிருக்க ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஸ்பீட் ஸ்கேட்டிங் பிரிவில் பதக்கம் வென்று திரும்பிய தமிழக வீரர் வீராங்கனைகளுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

3,000 மீட்டர் ஸ்பீட் ஸ்கேட்டிங் போட்டியில், இந்திய அணி சார்பில் விளையாடிய தமிழகத்தை சேர்ந்த வீரர் ஆனந்த் குமார், வீராங்கனைகள் ஆர்த்தி கஸ்தூரி ராஜ் மற்றும் கார்த்திகா ஜெகதீஸ்வரன் ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினர். இதையடுத்து அவர்கள் மூன்று பேருக்கும் சென்னை விமான நிலையத்திற்கு திரும்பியபோது உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.