விளையாட்டு

இன்று கடைசி ஒரு நாள் போட்டி: தமிழக வீரருக்கு வாய்ப்பு, மீண்டும் சாதிக்குமா இந்திய அணி?

இன்று கடைசி ஒரு நாள் போட்டி: தமிழக வீரருக்கு வாய்ப்பு, மீண்டும் சாதிக்குமா இந்திய அணி?

webteam

இந்திய- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான கடைசி ஒரு நாள் போட்டி மெல்போர்னில் இன்று நடக்கிறது. 

இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை முதல்முறையாக வென்று சாதனை படைத்த இந்திய அணி, அடுத்து ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. 

இரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியும், 2-வது ஆட்டத்தில் இந்திய அணியும் வெற்றி பெற்றன. தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 3-வது ஒரு நாள் போட்டி மெல்போர்னில் இன்று நடக்கிறது. 

இந்தப் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றினால், அது சாதனையாக இருக்கும். இதற்கு முன், இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு நாள் தொடரை, கைப்பற்றியதில்லை. 
 
இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு கடந்த போட்டியில் சிறப்பாக இருந்தது. 299 ரன் என்ற இலக்கை இந்திய பேட்ஸ்மேன்கள் பதட்டமில்லாமல் சேஸ் செய்து வெற்றி பெற்றனர். கேப்டன் விராத் கோலி அபார சதம் அடித்தார். அனுபவ வீரர் தோனி, தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆடி அரை சதம் அடித்தார். 

பந்துவீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டனர். புவனேஷ்வர்குமார், முகமது ஷமி ஆகியோர் நன்றாக பந்துவீசினர். அதனால் இந்திய அணி, நம்பிக்கையுடன் இன்று களமிறங்குகிறது. இன்றைய போட்டியில் தமிழக வீரர், ஆல்ரவுண்டர் விஜய் சங்கருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது அவருக்கு முதல் ஒரு நாள் போட்டி. 

ஆஸ்திரேலிய அணி, பேட்டிங்கில் மார்ஷ், ஹேன்ட்ஸ்கோம்ப், மேக்ஸ்வெல், ஸ்டோயினிஸ் ஆகியோரையே நம்பி இருக்கிறது. கேப்டன் ஆரோன் பின்ச், விக்கெட் கீப்பர் அலெக்ஸ் காரி ஆகியோர் ஏமாற்றி வருகின்றனர்.

வேகப்பந்து வீச்சாளர் பேரன்டோர்ஃபுக்கு ஓய்வு அளிக்கப் பட்டுள்ளது. அவர் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் லியான் ஆகியோருக்குப் பதிலாக, ஸ்டான்லேக், ஆடம் ஜம்பா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். டெஸ்ட் தொடரை இழந்த அந்த அணி ஒருநாள் தொடரை வெல்ல கடுமையாக போராடும் என்பதால் இன்றைய போட்டி பரபரப்பாக இருக்கும்.