உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடிக்காத ரஹானே, இங்கிலாந்தின் கவுண்டி கிரிக்கெட்டில் ஆடுகிறார்.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி முடிந்ததும் இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் செல்கிறது. அங்கு 2 டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது. ஜூலை மாத இறுதியில் இந்த தொடர் தொடங்குகிறது. இதையொட்டி உலக கோப்பை அணியில் இடம் பெறாத முன்னணி வீரர்களை தயார்படுத்த அவர்களை இங்கிலாந்தின் கவுண்டி போட்டியில் விளையாட வைக்க, இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.
புஜாரா, அஸ்வின், இஷாந்த் சர்மா ஆகியோர் ஏற்கனவே கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடி வரும் நிலையில் அவர்களுடன் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரஹானேவையும் கவுண்டியில் விளையாட வைக்க, இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. அதன்படி, ரஹானே, ஹம்ப்ஷைர் அணிக்காக ஆடுவார் எனத் தெரிகிறது. இதற்காக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அனுமதிக்கு காத்திருக் கிறார். அவருக்கு விரைவில் அனுமதி அளிக்கப்படும் எனத் தெரிகிறது. கவுண்டி கிரிக்கெட்டில் ரஹானே பங்கேற்பது இதுவே முதன்முறை.
கிரிக்கெட் வீரர்கள் பிருத்வி ஷா, ஹனுமா விஹாரி, மயங்க் அகர்வால் ஆகியோரையும் கவுண்டி கிரிக்கெட் போட்டிக்கு அனுப்ப, இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்காக எஸ்செக்ஸ், லீசெஸ்டர்ஷைர், நாட்டிங்காம்ஷைர் அணிகளுடனும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.