விளையாட்டு

ஏன் எல்லோரும் பும்ராவை விமர்சிக்கிறீர்கள்? : கொந்தளிக்கும் நெஹ்ரா

ஏன் எல்லோரும் பும்ராவை விமர்சிக்கிறீர்கள்? : கொந்தளிக்கும் நெஹ்ரா

webteam

இந்திய அணியின் யார்க்கர் மன்னன்.. டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் என அழைக்கப்படுபவர் ஜஸ்பிரித் பும்ரா. இவர், எதிரணி வீரர்களை தன்னுடைய நேர்த்தியான பந்துவீச்சால் கடந்த இரண்டு வருடங்களாக மிரட்டி வந்தார். இந்திய அணியில் ஜாகீர்கானுக்கு பிறகு சர்வதேச தரத்தில் ஒரு வேகப்பந்து வீச்சாளர் இடம்பெற்றுள்ளார் என ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்து வந்தனர்.

இந்நிலையில், பும்ரா கடந்த செப்டம்பர் மாதம் முதல் எலும்பு முறிவால் அவதிப்பட்டு வந்தார். இதனால், தொடர்ச்சியாக பல தொடர்களில் அவர் பங்கேற்கவில்லை. மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி அவர் ஓய்வு எடுத்து வந்தார். நீண்ட நாள் ஓய்வுக்கு பின்னர் அவர் கடந்த மாதம் நடைபெற்ற இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய தொடர்களில் பங்கேற்றார். அதனையடுத்து, தற்போது நியூசிலாந்து தொடரில் பங்கேற்றுள்ளார்.

ஆனால், ஓய்வுக்கு பின்னர் பங்கேற்ற போட்டிகளில் பும்ராவின் பந்துவீச்சு அவ்வளவாக சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை. 14 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், மொத்தம் 9 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளார். 6 போட்டிகளில் ஒரு விக்கெட் மட்டுமே எடுத்துள்ளார். அதுமட்டுமில்லாமல், நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஒருவிக்கெட் கூட வீழ்த்தவில்லை என்பதோடு, வழக்கத்திற்கு மாறாக ரன்களையும் வாரி வழங்கினார்.

இந்திய அணியின் பந்துவீச்சில் முதுகெலும்பாக உள்ள பும்ராவின் ஒருநாள் போட்டிக்கான ஃபார்ம் கவலை கொள்ளும் வகையில் தற்போது உள்ளது. பும்ராவின் ஃபார்ம் குறித்து விவாதங்களும் எழுந்துள்ளன. இதுகுறித்து பேசியுள்ள அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் நெஹ்ரா, “ஒவ்வொரு தொடரிலும் பும்ராவே பந்துவீச வேண்டும் என எதிர்பார்க்க கூடாது. அவர் காயத்தில் இருந்து திரும்பி வந்திருக்கிறார் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். எல்லா நேரத்திலும் ஒரு வீரர் உச்சத்தில் விளையாடுவார் என எதிர்பார்க்கக் கூடாது. ஏன் விராட் கோலிக்கு கூட இந்த தொடர் சரியாக அமையவில்லை” என்று கூறியுள்ளார்.

அத்துடன் அணி நிர்வாகம் மீதும் சில கேள்விகளை எழுப்பியுள்ளார். “அணி நிர்வாகம் ஆடும் லெவனை தேர்வு செய்வதில் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும். வேகப்பந்து வீச்சாளர்களை பொறுத்தவரை பும்ரா, சமி தவிர்த்து மற்ற வீரர்களது பங்களிப்பை உறுதி செய்ய வேண்டும். கடந்த இரண்டு வருடங்களாக பும்ரா, சமியை தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்துள்ளனர். அணித் தேர்வில் கொஞ்சம் நிலைத்தன்மை இருந்து வருகிறது” என்று நெஹ்ரா தெரிவித்துள்ளார்.

வேகப்பந்து வீச்சாளர்களைப் பொறுத்தவரை இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சமி, உமேஷ் யாதவ், புவேனேஸ்வர் குமார் ஆகியோர் உள்ளனர். தற்போது புதுவரவாக சைனி உள்ளிட்ட இளம் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்களை மாற்று முறையில் பயன்படுத்துவதே இந்திய அணியின் இந்த சிக்கலுக்கு தீர்வாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.