india team in chess olympiad web
விளையாட்டு

‘ஏறி ஆடுங்க இது நம்ம காலம்..’ செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் முதல்முறையாக தங்கம் வென்று இந்தியா சாதனை!

Rishan Vengai

45வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளானது ஹங்கேரியின் புடாபெஸ்டில் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதில் பங்கேற்க இந்தியாவின் சார்பில் எப்போதும் இல்லாத வகையில், குகேஷ், பிரக்ஞானந்தா, அர்ஜூன் எரிகைசி, ஹரிகிருஷ்ணா, விதித் குஜ்ராத்தி முதலிய டாப் கிளாஸ் வீரர்கள் அடங்கிய குழு பயணப்பட்டுள்ளது.

இதுவரை இந்தியா செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் வெண்கலப்பதக்கம் மட்டுமே வென்றிருக்கும் நிலையில், இந்தமுறை இந்த பவர்ஃபுல் டீம் ஆனது நிச்சயம் தங்கத்தை நாட்டிற்கு எடுத்துவரும் என்ற நம்பிக்கையுடன் இந்தியா காத்திருந்தது.

இந்நிலையில் ஞாயிற்றுகிழமையான இன்று ஓபன் பிரிவில் இந்தியா செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் முதல் தங்கப் பதக்கத்தை தட்டிச்சென்றது.

முதல் தங்கத்தை தட்டிச்சென்ற இந்தியா..

2024 செஸ் ஒலிம்பியாட் ஓபன் பிரிவில் குகேஷ், பிரக்ஞானந்தா, அர்ஜூன் எரிகைசி, ஹரிகிருஷ்ணா, விதித் குஜ்ராத்தி முதலியோர் அடங்கிய இந்திய ஆண்கள் அணி களம்கண்டது.

ஆட்டத்தின் முதல் வெற்றியை ஜான் சுபெல்ஜுக்கு எதிராக அர்ஜூன் எரிகைசி எடுத்துவந்தார், இரண்டாவது வெற்றியை பொறுத்தவரையில் குகேஷ் விளாடிமிர் ஃபெடோசீவுக்கு எதிராக அடித்தார். உலக சாம்பியன்ஷிப் போட்டியாளரான ஆர் பிரக்ஞானந்தா விரைவில் வெற்றியை சேர்த்தார்.

இறுதிப்போட்டியில் ஸ்லோவேனியாவுக்கு எதிராக போட்டி சமன் செய்யப்பட்டாலும், அர்ஜுன் எரிகைசி, குகேஷ், பிரக்ஞானந்தா பெற்ற தனிப்பட்ட வெற்றியால் 3-0 என முன்னிலை பெற்ற இந்திய அணி புள்ளிகள் அடிப்படையில் தங்கத்தை தட்டிச்சென்றது.

ஒருபோட்டியில் கூட தோல்வியை தழுவாமல் வெற்றிநடை போட்டுவரும் அர்ஜுன் எரிகைசி லைவ் ரேட்டிங்கில் 2797.2 புள்ளிகளுடன் உலகின் டாப் 3 வீரராக மாறி சாதனை படைத்துள்ளார்.

அர்ஜுன் எரிகைஸி

இதற்குமுன்பு சென்னையில் நடைபெற்ற 2022 செஸ் ஒலிம்பியாட் மற்றும் 2014 செஸ் ஒலிம்பியாட் என இரண்டிலும் வெண்கலம் மட்டுமே பெற்றிருந்த இந்தியா ஒரு அணியாக 2024 செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது.

தங்கம் வென்ற இந்தியாவுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.