விளையாட்டு

ஸ்லிப்பில் சிக்கிய கே.எல்.ராகுல், புஜாரா: தடுமாறும் இந்திய அணி!

ஸ்லிப்பில் சிக்கிய கே.எல்.ராகுல், புஜாரா: தடுமாறும் இந்திய அணி!

webteam

இந்திய கிரிக்கெட் அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை தழுவிய இந்திய அணி, ஜோகன்னஸ்பர்க்கில் மூன்றாவது போட்டியில் விளையாடி வருகிறது.

இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 187 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இரண்டாவது நாளில் பும்ரா, புவனேஷ்வர் குமார் ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சால் தென்னாப்பிரிக்க அணி 194 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஆம்லா 61 ரன்களும், பிலாண்டர் 35 ரன்களும் எடுத்தனர். ரபடா 30 ரன்கள் எடுத்தார். பும்ரா 5 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

7 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி, இரண்டாம் நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 49 ரன்கள் எடுத்தது. பார்த்திவ் படேல் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முரளி விஜய் 13 ரன்களுடனும், ராகுல் 16 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 

மூன்றாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ரன் கணக்கைத் தொடங்கும் முன்பே, கே.எல். ராகுல், பிலாண்டரின் பந்தை தொட, அது ஸ்லிப்பில் நின்ற டுபிளிசிஸ் கையில் தஞ்சமடைந்தது.

அடுத்து புஜாரா வந்தார். முதல் இன்னிங்ஸில் பொறுமை காத்த புஜாரா, இந்த இன்னிங்ஸிலும் ’நின்று’ சாதிப்பார் என்று எதிர்பார்த்தால், வந்த வேகத்திலேயே, மோர்கல் பந்தில் ஸ்லிப்பில் நின்ற டுபிளிசிஸ் கையில் கேட்ச் கொடுத்து ஏமாற்றமளித்தார். இப்படி அவுட் ஆவதை எதிர்பார்க்காத புஜாரா, சிறிது நேரம் அதிர்ச்சியில் நின்றே விட்டார்.

இதனால், இந்திய அணி, 57 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. கேப்டன் விராத் கோலியும் முரளி விஜய்யும் இப்போது ஆடி வருகின்றனர்.