விளையாட்டு

அடுத்தடுத்து சரியும் இந்திய அணியின் விக்கெட்டுகள் - ஆறுதல் தந்த அஸ்வின் அதிரடி ஆட்டம்

அடுத்தடுத்து சரியும் இந்திய அணியின் விக்கெட்டுகள் - ஆறுதல் தந்த அஸ்வின் அதிரடி ஆட்டம்

EllusamyKarthik

நியூசிலாந்து அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியின் மூன்றாம் நாள் ஆட்டத்தில் தொடக்கம் முதலே விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தின் மூன்றாம் நாளின் முதல் செஷனில் 39 ரன்களை சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது இந்தியா. கேப்டன் கோலி(44), பண்ட் (4) மற்றும் ரஹானே(49) என மூவரும் தங்களது விக்கெட்டுகளை நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்களிடம் இழந்துள்ளனர். 

143 - 3 என்ற நிலையில் இன்றைய ஆட்டத்தை தொடங்கியது இந்தியா. கேப்டன் கோலி இன்றைய ஆட்டத்தில் ரன் ஏதும் சேர்க்காமல் ஜேமிசன் வேகத்தில் LBW முறையில் விக்கெட்டை இழந்தார். தொடந்து வந்த ரிஷப் பண்டும் ஜேமிசன் பந்துவீச்சில் வெளியேறினார். நிதானமாக விளையாடிய துணை கேப்டன் ரஹானே 49 ரன்களில் வேக்னர் வேகத்தில் வீழ்ந்தார். 

அடுத்து இந்திய அணியின் ஆல் ரவுண்டர்கள் ஜடேஜா மற்றும் அஷ்வின் ஜோடி சேர்ந்து விளையாடினர். நியூசிலாந்து அணி இந்தியாவை வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டு அச்சுறுத்தி வருகிறது. ஆடுகளத்தில் பந்து ஸ்விங்காகி வருகிறது. இருப்பினும், அஸ்வின் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி அதிரடி காட்டினார். விக்கெட் சரிவுக்கு இடையே அஸ்வின் அதிரடி ரசிகர்களுக்கு சற்றே ஆறுதலாக இருந்தது. இருப்பினும் 27 பந்துகளில் 22 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் ஆட்டமிழந்தார். இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்துள்ளது.