விளையாட்டு

என்னாச்சு? இந்திய அணி 7 ரன்னுக்கு 3 விக்கெட்: தவான், ராயுடு டக் அவுட்!

என்னாச்சு? இந்திய அணி 7 ரன்னுக்கு 3 விக்கெட்: தவான், ராயுடு டக் அவுட்!

webteam

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி, 7 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. 

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மழை காரணமாக, 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது. அடுத்த நடந்த 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. 71 ஆண்டுக்குப் பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இரு அணிகளும் பங்கேற்கின்றன. முதலாவது ஒரு நாள் போட்டி சிட்னியில் இன்று நடந்து வருகிறது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. பெண்கள் குறித்த சர்ச்சை கருத்து வெளியிட்டதால் இந்திய அணி யில் ராகுலும் ஹர்திக் பாண்ட்யாவும் இடம் பெறவில்லை. ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராத் கோலி (கேப்டன்), அம்பத்தி ராயுடு, தினேஷ் கார்த்திக், தோனி, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், புவனேஷ்வர்குமார், கலீல் அகமது, முகமது ஷமி ஆகியோர் களமிறங்கினர்.

ஆஸ்திரேலிய அணியில் அலெக்ஸ் கேரியும் கேப்டன் ஆரோன் பின்சும் ஆட்டத்தைத் தொடங்கினர். மூன்றாவது ஓவரில் பின்ச் (6) விக்கெட் டை சாய்த்தார் புவனேஷ்வர்குமார். அடுத்து கவாஜா வந்தார். அவரும் கேரியும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அணியின் ஸ்கோர் 41 ஆக இருந்தபோது, குல்தீப் பந்துவீச்சில் ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து கேரி ஆட்டமிழந்தார். அவர் 24 ரன்கள் எடுத்திருந்தார்.

அடுத்து கவாஜாவுடன், ஷான் மார்ஷ் இணைந்தார். இருவரும் அடித்து ஆடினர். 81 பந்தில் 59 ரன் எடுத்திருந்த கவாஜாவை எல்பிடபிள்யூ முறையில் ஆட்டகிழக்க செய்தார் ஜடேஜா. அடுத்து வந்த ஹேண்ட்ஸ்கோம்ப் பொறுப்பாக ஆடினார். அணியின் ஸ்கோர் 186 ஆக இருந்த போது, மார்ஷ் அரைசதம் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் 54 ரன் எடுத்திருந்தார். அடுத்து ஸ்டோயினிஸும் ஹேண்ட்ஸ்கோம்பும் அதிரடி காட்டினர். 47.2 ஓவரில், 73 ரன் எடுத்திருந்த ஹேண்ட்ஸ்கோம்ப், புவனேஷ்வர்குமார் பந்துவீச்சில் தவானிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

அவர் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் 61 பந்தில் 73 ரன் எடுத்திருந்தார். அப்போது அணியின் ஸ்கோர், 5 விக்கெட் இழப்புக்கு 254 ரன்னாக இருந்தது. கடைசி இரண்டு ஓவரில். ஸ்டோயினிஸூம் மேக்ஸ்வெல்லும் அதிரடி காட்ட, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் அந்த அணி 288 ரன் குவித் தது.  ஸ்டோயினிஸ் 47 ரன்னுடனும் மேக்ஸ்வெல் 5 பந்தில் 11 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இந்திய அணி தரப்பில், புவனேஷ்வர்குமார், குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டும் ஜடேஜா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

இதையடுத்து 289 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இந்திய அணி தனது பேட்டிங்கை தொடங்கியது. ரோகித் சர்மாவும், தவானும் ஆட்டத்தை தொடங்கினர். முதல் ஓவரின் கடைசி பந்தில் தவான் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அவரது விக்கெட்டை அறிமுக வீரராக களமிறங்கிய ஜேசன் பேரன்டோர்ஃப் வீழ்த்தினார்.

அடுத்து கோலி வந்தார். நின்று ரன் குவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கோலி வெறும் 3 ரன் மட்டுமே எடுத்த நிலையில், ரிச்சர்ட்சன் பந்துவீச்சில் ஸ்டோயினிசிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து ராயுடு வந்தார். அவரும் ரிச்சர்ட்சன் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேற, வெறும் 7 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது. இதையடுத்து தோனியும் ரோகித் சர்மாவும் ஆடி வரு கின்றனர்.