விளையாட்டு

வட்டு எறிதல் வீராங்கனை கமல்பிரீத் கவுர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

jagadeesh

24-வது பெடரேஷன் கோப்பைக்கான தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வட்டு எறிதல் பிரிவில் தங்கம் வென்ற கமல்பிரீத் கவுர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிப் பெற்றார்.

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நடந்து வரும் இந்தப் போட்டியில் 5-வது மற்றும் கடைசி நாளான நேற்று நடந்த பெண்களுக்கான வட்டு எறிதலில் பஞ்சாப் வீராங்கனை கமல்பிரீத் கவுர் 65.06 மீட்டர் தூரம் எறிந்து தேசிய சாதனையோடு தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார். தனது முதல் முயற்சிலேயே நீண்ட தூரம் வீசி அசத்திய 25 வயதான கமல்பிரீத் கவுர் ஜூலை-ஆகஸ்டில் நடக்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றார்.

ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி இலக்கு 63.5 மீட்டர் தூரமாகும். தடகளத்தில் தனிநபர் பிரிவில் இருந்து ஒலிம்பிக்குக்கு தகுதி பெற்ற 10-வது இந்தியர் கமல்பிரீத் கவுர் ஆவார். கமல்பிரீத் வட்டு வீசிய தூரம் புதிய தேசிய சாதனையாகவும் பதிவானது. இதற்கு முன்பு நட்சத்திர வீராங்கனை கிருஷ்ண பூனியா 2012-ம் ஆண்டில் 64.76 மீட்டர் தூரம் வீசியதே தேசிய சாதனையாக இருந்தது. அந்த 9 ஆண்டு கால சாதனையை முறியடித்தார்.