விளையாட்டு

புத்தாண்டில் முதல் வெற்றியை பதிவு செய்யுமா இந்திய அணி ?

புத்தாண்டில் முதல் வெற்றியை பதிவு செய்யுமா இந்திய அணி ?

jagadeesh

இந்தியா - இலங்கை இடையிலான முதல் இருபது ஓவர் போட்டி அசாமில் இன்று நடைபெறுகிறது. புத்தாண்டை வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் இந்திய அணி இப்போட்டியில் களமிறங்கவுள்ளது.

இருபது ஓவர் உலகக்கோப்பை வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ளதால், அந்த வகையிலா‌ன போட்டிகளில் இந்திய அணி தீவிரமாக தயாராகி வருகிறது. அதன்படி, அதிக எண்ணிக்கையிலான இருபது ஓவர் ஆட்டங்களில் விளையாடவும் இந்திய அணி திட்டமிட்டுள்ளது.

புத்தாண்டில் இந்திய அணி தனது முதல் போட்டியில், இலங்கை அணியை எதிர்த்து இன்று மோதவுள்ளது. கவுஹாத்தியில் நடைபெறும் இந்த ஆட்டத்தில், காயத்திலிருந்து மீண்ட வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா நான்கு மாதங்களுக்குப் பிறகு களம் காணவுள்ளார். இந்திய அணியின் துருப்புச்சீட்டாக பார்க்கப்படும் இவர், மீண்டும் தனது இயல்பான பந்துவீச்சை வெளிபடுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

காயத்திலிருந்து திரும்பியுள்ள தொடக்க வீரர் ஷிகர் தவானும், அணியில் தனது இடத்தை உறுதி செய்ய நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். பந்துவீச்சை பொறுத்தமட்டில், இளம் வீரர்கள் ஷர்துல் தாகூர், நவ்தீவ் சைனி, குல்தீப் யாதவ், மற்றும் யுஷ்வேந்திர சஹால் ஆகியோர் நம்பிக்கை அளித்து வருகின்றனர். இலங்கைக்கு எதிரான தொடரில், முன்னணி வீரர்கள் ரோகித் சர்மா, முகமது ஷமி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக இலங்கை அணி சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்த திணறி வருகிறது. எனவே இந்தியா உடனான தொடரில் அந்த அணி நேர்த்தியாக விளையாட முயற்சிக்கும் எனலாம். குஷல் பெரைரா, பனுகா ராஜபக்ச, ஹசரங்கா, குணதிலகா உள்ளிட்டோர் அச்சுறுத்தும் பேட்ஸ்மேனாக திகழ்கிறார்கள். அனுபவ வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் நீண்ட நாள்களுக்குப் பிறகு அணியில் சேர்க்கப்பட்டுள்ளதும் பலமாகவே பார்க்கப்படுகிறது.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இலங்கைக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று புத்தாண்டை புது பாய்ச்சலோடு தொடங்குமென நம்பலாம்.