ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் ஜடேஜா பிட்ச் மீது ஓடியதால் இந்திய அணிக்கு 5 ரன்கள் குறைக்கப்பட்டு, பின்னர் அந்த அபராதம் நீக்கப்பட்டது.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 2வது ஒருநாள் போட்டி ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் முதல் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 340 ரன்கள் குவித்தது. இந்திய அணி ஷிகர் தவான் 96 (90), கே.எல்.ராகுல் 80 (52), விராட் கோலி 78 (76) மற்றும் ரோகித் சர்மா 42 (44) எனப் பலரும் ரன்களை குவித்தனர். இறுதிவரை ஆட்டமிழக்காத ஜடேஜா 16 பந்துகளில் 20 ரன்களை சேர்த்தார்.
இதற்கிடையே மிட்ஜெல் ஸ்டார்க் வீசிய 48 ஓவரின் 5வது பந்தில், ராகுல் அடித்த ஒரு ரன்னிற்காக ஜடேஜா ஓடும்போது பந்துவீசும் பிட்ச்சில் ஓடியதாக நடுவர் இந்திய அணிக்கு ரன்களை அபராதமாக விதித்தார். அதன்படி, இந்திய அணிக்கு 5 ரன்களை குறைக்கும் வகையில், ஆஸ்திரேலிய அணிக்கு 5 ரன்கள் போனசாக வழங்கப்பட்டது. பின்னர் அந்த அபராதம் நீக்கப்பட்டது. அபராதம் விதிப்பதற்கு சற்று நேரத்திற்கு முன்பே ஜடேஜாவிற்கு பிட்ச் மீது ஓடியதற்காக நடுவர் எச்சரிக்கை கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.