ஹாட்ரிக் வெற்றியால் ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசையில் இந்தியா முதலிடத்துக்கு முன்னேறியது.
நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. நேற்று நடைபெற்ற இரு அணிகளுக்கு இடையேயான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் 91 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்திய அணி. ரோகித் சர்மா 101 ரன்களும், சுப்மான் கில் 112 ரன்களும் விளாசினர். ஹாட்ரிக் வெற்றியை வசப்படுத்திய இந்தியா 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது. அதோடு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அணிகளுக்கான தரவரிசையில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.
இந்த தொடருக்கு முன்பாக இந்திய அணி ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் 110 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் இருந்தது. இப்போது நியூசிலாந்தை முழுமையாக வீழ்த்தியதன் மூலம் இந்தியா 114 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. இதுவரை முதலிடத்தில் இருந்த நியூசிலாந்து 6 புள்ளிகளை இழந்து 111 புள்ளிகளுடன் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இங்கிலாந்து 113 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், ஆஸ்திரேலியா 112 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளன.
அடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதுகின்றன. வரும் 27ம் தேதி முதல் டி20 போட்டி ராஞ்சியில் நடக்கிறது.
இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் 27ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இத்தொடரை இங்கிலாந்து அணி முழுமையாக (3-0) வெல்லும் பட்சத்தில் ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியாவை பின்னுக்குத்தள்ளி இங்கிலாந்து முதலிடத்திற்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளது.
தவற விடாதீர்: நியூசிலாந்தை ஒயிட் வாஷ் செய்தது இந்திய அணி!