இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி ஒரு நாள் போட்டி இன்று தலைநகர் டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போது வரை நடைபெற்றுள்ள நான்கு போட்டியில் இரு அணிகளும் தலா இரண்டில் வெற்றிப் பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் இரண்டாவது பேட்டிங் செய்யும் அணியே அதிகம் வெற்றிப் பெற வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் நிபுணர்கள் கருதுகிறார்கள். டெல்லியில் இன்னும் முழுமையாக கோடை காலம் தொடங்காததால் இரவு நேரங்களில் பனிப்பொழிவு இருக்குமென்றும் இதன் காரணமாக இரண்டாவது பேட்டிங் செய்வது எளிது என்றும் கூறப்படுகிறது.
சொந்த மண்ணில் இந்திய அணியிடம் ஒருநாள் தொடரை பறிகொடுத்ததால், அதேபோன்று இந்தியாவை சொந்த மண்ணில் வென்று பதிலடி தர வேண்டும் என்ற தீர்மானத்தில் ஆஸ்திரேலிய அணி உள்ளது. அதேசமயம் சொந்த மண்ணில் தோற்றுவிடக்கூடாது என முனைப்பில் இந்திய அணி தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்தத் தொடரில் குறிப்பிட்ட பார்க்க வேண்டிய ஒரு நிகழ்வாக பனிப்பொழிவு உள்ளது. ஏனென்றால் விராட் கோலி கடந்த இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்த போது அளித்த பேட்டியில், தோல்விக்கும் முக்கிய காரணங்களில் ஒன்றாக குறிப்பிட்டு கூறியது பனிப்பொழிவு.
3 வது போட்டியின் தோல்வியின் போது பேட்டியளித்திருந்த விராட், “பனிப்பொழிவு நேரத்தில் பந்துவீசுவது கடினமாகிவிடும் என்பதால் முதல் பேட்டிங்கை தேர்வு செய்தோம். ஆனால் பனிப்பொழிவு சரியாக இல்லை” என்றார். 4வது போட்டி முடிந்த பின்னர் பேசிய அவர், “பனிப்பொழிவு பெரிதாக இருக்காது என நினைத்து முதல் பேட்டிங்கை தேர்வு செய்தோம். ஆனால் இந்தமுறையும் பனிப்பொழிவு எங்களை ஏமாற்றிவிட்டது. பனிப்பொழிவால் எங்கள் பந்துவீச்சாளர்கள் சரியாக பந்துவீச முடியவில்லை” என்றார்.
இந்திய அணியின் பந்துவீச்சு கவலை தருவதாக இருக்கிறது. கிரிக்கெட் உலகமே, இந்தியாவின் வேகப்பந்து வீச்சு அணியே சிறந்தது என பாராட்டி வந்த நிலையில் மொஹாலியில் ஆஸி. வீரர்கள் அஷ்டன் டர்னர், ஹேண்ட்ஸ்கோம்ப் ஆகியோர் அந்த எண்ணத்தை தவிடுபொடியாக்கி விட்டனர். கடைசி ஓவர்களில் பந்துவீசுவதில் நிபுணர் என கூறப்படும் ஜஸ்ப்ரீத் பும்ராவின் பந்துவீச்சையும் பதம் பார்த்தனர். புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ் ஆகியோரும் 10 ஓவர்களில் 60-க்கு மேல் ரன்களை வாரி தந்தனர்.
பெரோஸ்ஷா கோட்லா மைதான ஆடுகளம் (பிட்ச்) மெதுவாகவும், தாழ்வாகவும் பந்து எழும்பும் தன்மை உடையது. இதில் டாஸ் வெல்வதே ஆட்டத்தின் போக்கை தீர்மானிக்கும். மேலும் மணிக்கட்டை பயன்படுத்தி பந்துவீசுபவர்களுக்கு பிட்ச் ஒத்துழைக்கும் எனக் கூறப்படுகிறது. கடைசியாக இங்கு நடைபெற்ற 2 ஒரு நாள் ஆட்டங்களில் நியூஸியிடம் தோல்வியும், மே.இ.தீவுகளுக்கு எதிராக வெற்றியையும் பதிவு செய்தது இந்தியா. ஷிகர் தவன் மீண்டும் பார்முக்கு திரும்பியுள்ளது அணிக்கு நிம்மதி தருகிறது. கோலி, தவன் ஆகியோர் சொந்த மண் என்பதால் சாதிக்க முனைவர்.