விளையாட்டு

ஆறுதல் வெற்றிக்கு போராடுமா இந்தியா? இன்றையப் போட்டியில் ரோகித் சர்மாவுக்கு மாற்று யார்?

ஆறுதல் வெற்றிக்கு போராடுமா இந்தியா? இன்றையப் போட்டியில் ரோகித் சர்மாவுக்கு மாற்று யார்?

jagadeesh

இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 3 ஆவது ஒருநாள் போட்டி இன்று சட்டோகிராமில் இருக்கும் ஜஹூர் அகமது சவுதரி மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் வங்கதேசம் வென்றுள்ளது. இந்நிலையில் 3ஆவது போட்டியில் ஆறுதல் வெற்றிப்பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.

இரு அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகளும் கடைசிக் கட்டம் வரை சென்றது சுவாரஸ்யமாக இருந்தாலும், கடைசியில் வங்கதேசமே வென்றது. அதிலும் கடந்தப் போட்டி இறுதி ஓவர் இறுதிப் பந்து வரை சென்றது நல்ல விருந்தாக அமைந்தது, கடந்தப் போட்டியில் விரலில் ஏற்பட்ட காயத்துடன் கடைசி வரை விளையாடி மனங்களை வென்றார் கேப்டன் ரோகித் சர்மா. ஆனால் இன்றைய ஆட்டத்தில் அவர் விளையாடமாட்டார் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல வேகப்பந்துவீச்சாளர் தீபக் சஹாரும் இந்தப் போட்டியில் காயம் காரணமாக விளையாடமாட்டார். எனவே இந்தப் போட்டியில் இந்திய அணிக்கு கே.எல்.ராகுல் கேப்டனாக செயல்படுவார். ரோகித் சர்மாவுக்கு பதில் இஷான் கிஷான் சேர்க்கப்படுவார் என தெரிகிறது. வங்கதேச அணியை பொறுத்தவரை குறையொன்றும் பெரிதாக இல்லை என்றாலும் அவர்களின் பேட்டிங்கை விட பவுலிங் சிறப்பாக இருக்கிறது. கடந்த இருபோட்டிகளிலும் மஹமதுல்லா, மெஹிதி ஹசன் தவிர வேறு எவறும் சிறப்பாக செயல்படவில்லை.

இந்திய உத்தேச அணி: இஷான் கிஷன், ஷிகர் தவான், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், உம்ரான் மாலிக், குல்தீப் யாதவ்

வங்கதேச உத்தேச அணி: நஜ்முல் ஹூசைன் ஷான்டோ, அபிஃப் ஹூசைன், ஷாகிப் அல் ஹசன், மகமதுல்லா, மெஹிதி ஹசன் மிராஸ், லிட்டன் தாஸ், முஷிபிகிர் ரஹிம், அனாமுல் ஹக் பிஜோய், முஸ்தாபிசூர் ரஹ்மான், எபாடாட் ஹூசைன், நசும் அகமது