india badminton players pt
விளையாட்டு

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் | ஒன்றுக்கு மேற்பட்ட பதக்கங்களை வென்று கொடுப்பார்களா இந்திய பேட்மின்டன் வீரர்கள்?

Viyan

புகழ்பெற்ற ஒலிம்பிக் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 26ம் தேதி முதல் தொடங்குகிறது. 127 பேர் கொண்ட இந்தியப் படை இந்தத் தொடரில் பங்கேற்கிறது. டோக்கியோவில் வென்ற 7 பதக்கங்களை விட அதிகமாக வெல்லவேண்டும் என்று முனைப்போடு வீரர்கள் இருக்கிறார்கள்.

இந்தியா பட்டம் வெல்ல அதிக வாய்ப்புள்ள விளையாட்டுகளில் பேட்மின்டனும் ஒன்று. மொத்தம் 7 வீரர்கள் 4 பிரிவுகளில் இந்தியா சார்பில் பங்கேற்கிறார்கள். இவர்களால் ஒன்றிரண்டு பதக்கங்கள் வெல்ல முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யாருக்கு பதக்கம் வெல்ல அதிக வாய்ப்பு, அலசுவோம்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு: பிரனோய் & லக்‌ஷயா சென்

ஒற்றையர் பிரிவில் பிரனோய், லக்‌ஷயா இருவரில் ஒருவராவது இந்த ஒலிம்பிக்கில் நெடுந்தூரம் செல்ல வாய்ப்புண்டு. 2023 உலக சாம்பியன்ஷிப் தொடரில் வெண்கலப் பதக்கம் வென்று அசத்திய சீனியர் வீரர் பிரனோய் சாம்பியன் வீரர்களை வீழ்த்துவதில் வல்லவர். பலமுறை அதை நிரூபித்திருக்கும் அவர், தன் முதல் ஒலிம்பிக் தொடரில் அப்படியொரு செயல்பாட்டைக் கொடுக்கக் காத்திருக்கிறார்.

பிரனோய்

இளம் வீரர் லக்‌ஷயா சென் கடந்த 3 ஆண்டுகளில் மாபெரும் எழுச்சி பெற்றிருக்கிறார். 2021ல் உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்று வரலாறு படைத்த அவர், இந்த ஆண்டு மட்டும் தொடர்ந்து சொதப்பிவந்தார். அதன் விளைவாக அவர் ரேங்கிங் கீழே இறங்க, ஒலிம்பிக் குரூப் அவருக்குக் கடினமாக அமைந்திருக்கிறது. குரூப் பிரிவிலிருந்து அவர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினாலும், அவர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பிரனோயை சந்திக்கவேண்டியிருக்கும். அதனால் எப்படியிருந்தாலும் ஒரு இந்திய வீரர் தான் காலிறுதிக்கு முன்னேற முடியும். அங்கே ஜப்பானின் கொடாய் நரோகாவை, அதைத் தாண்டினால் அரையிறுதியில் விக்டன் ஆக்சல்சனை அவர்கள் சந்திக்கவேண்டும். எனவே இந்தப் பிரிவில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைப்பது அவ்வளவு எளிதாக இருக்காது.

பெண்கள் ஒற்றையர் பிரிவு: பி.வி.சிந்து

ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி, டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் என்று அடுத்தடுத்து இரண்டு ஒலிம்பிக் பதக்கங்கள் வென்று அசத்தியிருக்கும் பி.வி.சிந்துவுக்கு இது வரலாறு படைக்கும் வாய்ப்பு. அதிக ஒலிம்பிக் பதக்கங்கள் வென்ற இந்தியர் என்ற சாதனை, பெண்கள் ஒற்றையர் பிரிவில் 3 பதக்கங்கள் வென்ற முதல் வீரர் என்ற சாதனை என அவரால் பாரிஸில் பல சாதனைகள் படைக்க முடியும். அதற்கு எந்த அளவுக்கு வாய்ப்பு இருக்கிறது என்பது சிந்துவின் ஃபிட்னஸை பொறுத்தது.

பி.வி.சிந்து

தொடர்ந்து கடந்த சில மாதங்களாக காயத்தால் அவதிப்பட்டு வந்த அவர், இப்போது கடும் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார். ஆண்கள் பிரிவைப் போலவே, இந்தப் பிரிவிலும் இந்தியாவுக்கு அட்டவணை நன்றாக அமையவில்லை. நடப்பு ஒலிம்பிக் சாம்பியனை சிந்து காலிறுதியிலேயே சந்திக்கவேண்டிய நிலை ஏற்படும். ரியோ, டோக்கியோ தொடர்களில் ஆடியதை விட சிறப்பாக ஆடினால் மட்டுமே சிந்துவால் தன் முன்னால் இருக்கும் சவால்களை உடைக்க முடியும்.

ஆண்கள் இரட்டையர் பிரிவு: சத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி & சிராக் ஷெட்டி

சத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி & சிராக் ஷெட்டி

கடந்த 3 ஆண்டுகளாக இவர்கள் அடைந்திருக்கும் உயரம் கணக்கிட முடியாதது. உலகின் டாப் ஜோடிகளையெல்லாம் பந்தாடி ஒவ்வொரு தொடரிலும் தங்கள் முத்திரையைப் பதித்திருக்கிறது இந்த ஜோடி. இரட்டையர் பேட்மின்டர் ரேங்கிங்கல் நம்பர் 1 இடத்துக்கும் முன்னேறி வரலாறு படைத்துவிட்டார்கள். மிகச் சிறந்த ஃபார்மில் இருக்கும் இவர்களால் நிச்சயம் பதக்கம் வெல்ல முடியும் என்று ஒட்டுமொத்த தேசமும் நம்பியிருக்கிறது. அதற்கு நிச்சயம் அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. தங்கள் பிரிவில் இருக்கும் இந்தோனேஷிய ஜோடிக்கு எதிராக வெற்றியை வசப்படுத்தினால் நாக் அவுட் சுற்று சற்று எளிதாக அமைந்துவிடும்.

பெண்கள் இரட்டையர் பிரிவு: அஷ்வினி பொன்னப்பா & தனிஷா கேஸ்ட்ரோ

அஷ்வினி பொன்னப்பா & தனிஷா கேஸ்ட்ரோ

சீனியர் அஷ்வினியும், ஜூனியர் தனிஷாவும் ஒன்றாக இணைந்து நல்ல முன்னேற்றம் கண்டிருக்கிறார். ஆனால், அவர்களால் ஒலிம்பிக் அரங்கில் பெரிய தாக்கம் ஏற்படுத்த முடியுமா என்பது சந்தேகமே. அவர்கள் பிரிவில் ஜப்பான், தென் கொரியா நாடுகளைச் சேர்ந்த ஜோடிகள் இருப்பதால், அவர்களை மீறி இந்த இணை நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறுவது கடினம் தான்.