ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய சாதனையாக அமைந்துள்ளது இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட தொடர். இந்த தொடரை 2 - 1 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது. மொத்தமாக 70 சிக்ஸர்கள் இந்த தொடரில் இரு அணியன் பேட்ஸ்மேன்களும் விளாசி உள்ளனர்.
இந்திய அணி வீரர்கள் 33 சிக்ஸர்களும், இங்கிலாந்து அணி வீரர்கள் 37 சிக்ஸர்களும் விளாசி உள்ளனர். இதன் மூலம் இதற்கு முந்தைய சாதனையான இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான தொடரில் அதிகபட்சமாக 57 சிக்ஸர் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது இடத்தில் கடந்த 2017 இல் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஒருநாள் தொடர் உள்ளது. அந்த தொடரில் 56 சிக்ஸர்கள் விளாசப்பட்டுள்ளன.
புனேவில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா, தவான் ஆகியோர் அதிரடியுடன் பேட்டிங்கை தொடங்கினர். ரோகித் சர்மா 37 ரன்னில் ஆட்டமிழக்க அரைசதம் கடந்த தவான் 67 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த ரிஷப் பந்த், ஹர்த்திக் பாண்டியா ஆகியோர் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தனர். சீரான இடைவெளியில் வீரர்கள் ஆட்டமிழக்க இறுதிக்கட்டத்தில் ஷர்துல் தாகூர் 3 சிக்ஸர்களுடன் 30 ரன் எடுத்தார். இந்திய அணி 48 புள்ளி 2 ஓவர்களில் 329 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
பின்னர் பேட்டிங்கை தொடங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் பேர்ஸ்டோ 1 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். மலான் அரைதம் அடிக்க மற்ற வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து திரும்பினர். எனினும் கடைசியில் அதிரடி காட்டி சதத்தை நெருங்கிய சாம் கரன், இந்திய அணிக்கு அச்சத்தை ஏற்படுத்தினார். கடைசி ஓவரில் 14 ரன்கள் என்ற பரபரப்பான கட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் வீசினார். அவர் வீசிய முதல் பந்திலேயே மார்க் வுட் ரன் அவுட்டாகி பரபரப்பை கூட்டினார். எனினும் அந்த ஓவரில் ஒரு பவுண்ட்ரி உள்பட 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்த நிலையில், இந்திய அணி வெற்றிபெற்றது. ஏற்கனவே டெஸ்ட் மற்றும் இருபது ஓவர் தொடரை கைப்பற்றிய இந்திய அணி, ஒருநாள் போட்டித் தொடரையும் தன்வசப்படுத்தியது.