விளையாட்டு

மிதாலி, ராதா யாதவ் மிரட்டல்: அரையிறுதியில் இந்திய அணி!

மிதாலி, ராதா யாதவ் மிரட்டல்: அரையிறுதியில் இந்திய அணி!

webteam

மகளிர் உலகக் கோப்பை டி20 போட்டியில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி, வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. இதில், பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி முதல் ஆட்டத்தில் பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் சதம் விளாசி சாதனை படைத்திருந்தார்.

(ஹர்மன்பிரீத் கவுர்)

இரண்டாவது போட்டியில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்கடித்தது. அனுபவ வீராங்கனையான மிதாலி ராஜ் இந்த ஆட்டத்தில் 56 ரன்கள் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்திருந்தார். இந்நிலையில் இந்திய அணி தனது 3-வது ஆட்டத் தில் நேற்று அயர்லாந்தை எதிர்கொண்டது.

டாஸ் வென்ற அயர்லாந்து அணி, முதலில் ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் குவித்தது. அதிகப்பட்சமாக அனுபவ வீராங்கனை மிதாலி ராஜ் 51 ரன்கள் எடுத்தார். அவருடன் களமிறங்கிய மந்தனா 33 ரன்கள் எடுத்தார்.

பின்னர் களமிறங்கிய அயர்லாந்து அணியால் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 93 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜாய்ஸ் 33 ரன்கள் எடுத்தார். இந்திய சுழற்பந்துவீச்சாளர், மும்பையைச் சேர்ந்த ராதா யாதவ் அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்டை வீழ்த்தினார்.

(ராதா யாதவ்)

இதையடுத்து தொடர்ந்து மூன்று போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி, அரை இறுதிக்கு முன்னேறியுள்ளது. தொடர்ந்து 3 ஆட்டங்களில் தோல்வியை தழுவிய அயர்லாந்து அணி, தொடரில் இருந்து வெளியேறியது.