விளையாட்டு

சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த மிதாலி ராஜ்

jagadeesh

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் அனைத்து வகையிலான சர்வதேசப் போட்டிகளில் அதிக ரன்களை எடுத்த வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டி வொர்செஸ்டரில் நேற்று நடந்தது. இதில் ராஜ் 10 ஆயிரத்து 273 ரன்களை கடந்து உள்ளார். இங்கிலாந்து முன்னாள் வீராங்கனையான சார்லோட் எட்வார்ட்சின் சாதனையை ராஜ் முறியடித்து இப்போது சர்வதேச அளவில் முதலிடம் பிடித்துள்ளார். மிதாலி ராஜ், மகளிர் ஒரு நாள் போட்டியில் அதிக ரன்களை கடந்து சாதனை படைத்த பெருமையை கொண்டுள்ளார். கடந்த மார்ச்சில் அவர் 7 ஆயிரம் ரன்களை நிறைவு செய்துள்ளார்.

கடந்த மார்ச்சில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென்ஆப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிரான ஆட்டத்தில், இந்திய அணியின் கேப்டனான மிதாலிராஜ் சர்வதேச போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்த வீராங்கனை என்ற சாதனையை படைத்தார். கிரிக்கெட்டின் அனைத்து நிலைகளிலான போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

மிதாலி ராஜ் பிறந்தது ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில். வளர்ந்து, குடியேறியது ஐதராபாத்தில். ஆனால் அவரது தாய்மொழி தமிழ் என்பது குறிப்பிடத்தக்க விஷயம். அவரது பெற்றோர் பெயர் துரைராஜ் - லீலா. இந்திய மகளிர் அணியில் மிதாலி ராஜின்வருகைக்கு பின்புதான் புதிய வேகம் பெற்றது என கூறலாம். ஏறக்குறைய கடந்த 18 ஆண்டுகளாக விளையாடி வரும் மிதாலி ராஜ் இந்திய மகளிர் அணியின் பல முக்கிய வெற்றிகளுக்குக் காரணமாக இருந்திருக்கிறார்.