விளையாட்டு

பகலிரவு டெஸ்ட்: இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

பகலிரவு டெஸ்ட்: இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

webteam

பங்களாதேஷூக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா-பங்களாதேஷ் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி, கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வந்தது. பகலிரவு போட்டியாக நடந்த இதில் பங்களாதேஷ் அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணி, முதல் இன்னிங்ஸில் 106 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில், இஷாந்த் ஷர்மா 5 விக்கெட்டுகளை சாய்த்தார். உமேஷ் யாதவ் 3, ஷமி 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 347 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. கேப்டன் விராத் கோலி அபார சதம் அடித்தார். பின்னர் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய பங்களாதேஷ் அணி, நேற்றைய ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுக்கு 152 ரன்கள் எடுத்திருந்தது. முஷ்பிகுர் ரஹிம் 59 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

மூன்றாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. வேகப்பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ் சிறப்பாக பந்துவீசினார். முஷ்பிகுர் 74 ரன்களில் ஆட்டமிழந்ததும் பங்களாதேஷ் அணியின் விக்கெட்டுகள் தொடர்ந்து சரிந்தன. அந்த அணி 195 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. 

இதனால் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய தரப்பில் உமேஷ் யாதவ் 5 விக்கெட்டுகளையும் இஷாந்த் சர்மா 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது.

இந்திய அணி தொடர்ந்து 4 டெஸ்ட் போட்டிகளில் இன்னிங்ஸ் வெற்றி பெற்று சாதனைப் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.