விளையாட்டு

கோலியின் மிகப்பெரிய பலம் எது ? ரகசியத்தை சொல்லும் விக்ரம் ரத்தோர் !

கோலியின் மிகப்பெரிய பலம் எது ? ரகசியத்தை சொல்லும் விக்ரம் ரத்தோர் !

jagadeesh

விராட் கோலிக்கு கிரிக்கெட் மீது இருக்கும் அர்ப்பணிப்பே அவரின் பேட்டிங் திறமைக்கு மிகப் பெரிய பலம் என்று இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் வேகமாக பரவி வருகிறது. கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்து பல்வேறு கட்டங்களாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. மேலும், இப்போது பல்வேறு மாநிலங்களில் தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் அமலில் இருக்கிறது. இதனால் இந்தியாவில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் தடைப்பட்டுள்ளது. மிக முக்கியமாக ஐபிஎல் போட்டிகள் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இந்திய கிரிக்கெட் வீர்ரகள் பலரும் இந்த பொது முடக்க காலக்கட்டத்தில் வீட்டிலேயே முடங்கி இருக்கின்றனர். பலரும் சமூகவலைத்தளங்கள் வாயிலாக வீட்டில் இருந்தபடியே உரையாற்றி வருகின்றனர். பல கிரிக்கெட் வீரர்கள் இன்னும் வலைப்பயிற்சியை கூட தொடங்கவில்லை. விராட் கோலி போன்றோர் வீட்டு வளாகத்திலியே டைம் பாஸுக்காக கிரிக்கெட் விளையாடி வருகின்றனர். கிரிக்கெட் வீரர்கள் மைதானத்துக்கு வந்து பயிற்சியை மேற்கொள்வதற்கான உத்தரவை பிசிசிஐ இன்னும் பிறப்பிக்கவில்லை.

இந்நிலையில், இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் "ஸ்போர்ட்ஸ்கீடா" இணையதளத்துக்கு பேட்டியளித்துள்ளார். அதில், விராட் கோலி குறித்து "கிரிக்கெட் மீது கோலி வைத்திருக்கும் அர்ப்பணிப்புதான் எனக்கு வியப்பாக இருக்கிறது. இந்த உலகத்திலேயே மிகச் சிறந்த வீரராக வேண்டும் என அவர் நினைக்கிறார். அதற்காக கடுமையாக உழைக்கிறார். கோலியைப் போல கடினமாக உழைக்கும் கிரிக்கெட் வீரரை நான் கண்டதில்லை. அவரின் மிகப் பெரிய பலம் சூழலுக்கு ஏற்றார்போல தன்னை பொருத்திக்கொள்வதே என நான் நினைக்கிறேன்" என்றார்.

மேலும், தொடர்ந்த அவர் " கோலி ஒரே வீரர்தான், ஆனால் அவரால் கிரிக்கெட்டின் மூன்று விதமான பரிணாமங்களிலும் அவரால் விளையாட முடியும். அவர் 50,20, டெஸ்ட் போட்டிகளுக்கு ஏற்றார் போல தன்னை மாற்றிக்கொண்டு விளையாடக் கூடிய திறனை பெற்றுள்ளார். அதுவும் அவரின் மிகப்பெரிய பலமாகவே கருதுகிறேன். 2016 ஐபிஎல் தொடரில் 4 சதங்கள். அதில் மொத்தம் 40 சிக்ஸர்கள் அடித்துவிட்டு அடுத்து வந்த வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஒரு பந்தை கூட சிக்ஸருக்கு அடிக்காமல் அவரால் இரட்டைச் சதம் அடிக்க முடிந்தது. அப்போது நான் வியந்துப்போனேன்" என்றார் விக்ரம் ரத்தோர்.