விளையாட்டு

டிராவில் முடிந்தது பயிற்சி ஆட்டம்: முரளி விஜய் அபார சதம்!

டிராவில் முடிந்தது பயிற்சி ஆட்டம்: முரளி விஜய் அபார சதம்!

webteam

இந்தியா-ஆஸ்திரேலிய லெவன் அணிகள் இடையிலான 4 நாள் பயிற்சி கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடந்து வந்தது. மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்ட நிலையில் இரண்டாம் நாளில் ஆட்டம் தொடங்கியது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்கள் எடுத்தது. பிருத்வி ஷா, புஜாரா, ரஹானே, கோலி, விஹாரி ஆகிய ஐந்து வீரர்கள் அரைசதம் அடித்தனர். தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் 3 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.

பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய லெவன் அணி, இந்திய அணியின் பந்துவீச்சை அமர்க்களமாக எதிர்கொண்டது. இந்திய பந்துவீச்சாளர்களுக்கு அவர்கள் ’தண்ணி’ காட்டினர். இந்திய தரப்பில் கேப்டன் விராத் உட்பட 10 பேர் பந்துவீசியும் அவர்களை கட்டுப்படுத்தவில்லை. அந்த அணி, முதல் இன்னிங்ஸில் 544 ரன்கள் குவித்தது. டியார்ஸி ஷார்ட், பிரியன்ட், ஹார்டி ஆகியோர் அரைசதம் அடித்தனர். விக்கெட் கீப்பர் நீல்சன் சதம் அடித்தார். இந்திய கேப்டன் விராத் கோலி, அவரது விக்கெட்டை வீழ்த்தினார்.

முகமது ஷமி 3 விக்கெட்டையும், அஸ்வின் 2 விக்கெட்டையும் உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா,  கோலி, பும்ரா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 

பின்னர் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. பிருத்வி ஷா காயம் காரணமாக வெளியேறியதால், கே.எல்.ராகுலும் முரளி விஜய்யும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இந்திய அணி ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுக்கு 211 ரன்கள் எடுத்தது. 

முதல் இன்னிங்ஸில் ஆட வாய்ப்புக்கொடுக்காதற்கு பழிவாங்கும் விதமாக, இந்த இன்னிங்ஸில் அதிரடியாக விளையாடியானார் முரளி விஜய். அவர் 132 பந்துகளில் 129 ரன்கள் எடுத்தார். இதில் 5 சிக்சர்களும் 16 பவுண்டரிகளும் அடங்கும். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான கே.எல்.ராகுல் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். விஹாரி 15 ரன்கள் எடுத்தார். இதையடுத்து போட்டி டிராவில் முடிந்தது.