சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, கணிக்கமுடியாத பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.
ஐசிசி சர்வதேச ஒருநாள் தரவரிசையில் முதல் 8 இடங்களைப் பிடித்துள்ள அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த ஜூன் ஒன்றில் தொடங்கியது. தொடரில் நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் தொடரில் விளையாடத் தொடங்கிய இந்திய அணி, பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றிகரமாக தொடரைத் தொடங்கியது. ஆனால், அடுத்த போட்டியில் இலங்கை அணி இந்தியாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. அந்த போட்டியில் 300 ரன்களுக்கு மேல் இந்திய அணி குவித்தும், வெற்றிபெற முடியவில்லை. இதனால், தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான போட்டியில் வெற்றிபெற வேண்டிய நெருக்கடியில் இந்திய அணி களமிறங்கியது. ஆனால், அந்த போட்டியில் தென்னாப்பிரிக்காவை 191 ரன்களில் சுருட்டியதுடன், 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வீழ்த்தி அரையிறுதி இடத்தை உறுதி செய்தது இந்திய அணி. அரையிறுதியில் வங்கதேசத்தை இந்தியா எதிர்கொண்டது. போட்டிக்கு முன்னதான செய்தியாளர் சந்திப்பில் வங்கதேசத்தை எளிதாக எண்ணக் கூடாது என்று கவனமாகவே வார்த்தைகளை உதிர்த்தார் இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி. அதேநேரம் நெருக்கடி என்பது எங்களுக்கில்லை, இந்திய அணிக்குத்தான் என்று வங்கதேச கேப்டன் மொர்டாசா கூறினார். ஆனால், களத்தில் நடந்ததோ வேறு. முதலில் பேட் செய்த வங்கதேசம் 264 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 40.1 ஓவர்களிலேயே ஒரு விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி எளிதாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறுவதே சந்தேகம்தான் என்ற நிலையில் தொடரில் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. அதற்கேற்றார்போல் முதல் போட்டியில் இந்திய அணியிடன் எந்தவித எதிர்ப்பும் காட்டாமல் பணிந்தது பாகிஸ்தான். ஆனால், அந்த போட்டிக்குப் பின்னர் பாகிஸ்தான் அணியின் திடீர் எழுச்சி அந்நாட்டு ரசிகர்களே எதிர்பார்க்காதது. முதல் போட்டியில் 124 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தோல்வி கண்ட பாகிஸ்தான் அணி, கடும் நெருக்கடிக்கு இடையில் தனது 2ஆவது போட்டியில் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்க அணி, பாகிஸ்தானின் சிறப்பான பந்துவீச்சால் நிலைகுலைந்தது. தென்னாப்பிரிக்கா நிர்ணயித்த 220 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி பாகிஸ்தான் வீறுநடை நடை போட்டது. 27 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் பாகிஸ்தான் குவித்திருந்தபோது, மழை குறுக்கிடவே, டக்வொர்த் லீவிஸ் முறைப்படி பாகிஸ்தான் 19 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்டது. இந்திய அணியை வீழ்த்தி புது உற்சாகத்துடன் இருந்த இலங்கை அணியை பாகிஸ்தான் அடுத்ததாக எதிர்கொண்டது. பாகிஸ்தானை எளிதில் வீழ்த்தி இலங்கை அணி அரையிறுதிக்கு தகுதிபெறும் என்றுதான் கிரிக்கெட் உலகம் எதிர்பார்த்தது. அந்த எதிர்பார்ப்புகளை தவிடுபொடியாக்கி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது பாகிஸ்தான். அரையிறுதிக்குள் நுழைந்துவிட்டாலும், இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற நடப்பு தொடரில் அதுவரை தோல்வியே சந்திக்காத பலமான இங்கிலாந்து அணியை வெல்ல வேண்டிய நிலை சர்ஃப்ராஸ் தலைமையிலான பாகிஸ்தானுக்கு ஏற்பட்டது. இறுதியில் அந்த சோதனையிலும் சர்ஃப்ராஸே வென்றார். சொந்த மண்ணில் கெத்து காட்டிய இங்கிலாந்து அணியை அநாயசமாக 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் கம்பீரமாக பாகிஸ்தான் முதல் அணியாகத் தகுதிபெற்றது. சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் முதன்முறையாகப் பங்கேற்கும் பாகிஸ்தான் அணி கோப்பையுடன் விமானம் ஏற வேண்டும் என்பதில் முனைப்புடன் இருக்கிறது.