விளையாட்டு

டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர் - விராட் கோலி புதிய சாதனை

டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர் - விராட் கோலி புதிய சாதனை

webteam

சர்வதேச இருபது ஓவர் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையை இந்தியக் கேப்டன் விராட் கோலி பெற்றுள்ளார்.

இந்தியா மற்றும் இலங்கை இடையேயான 2வது டி20 போட்டி நேற்று இந்தூரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதல் பேட்டிங் செய்த இலங்கை அணி 142 ரன்கள் சேர்க்க, அதனை எதிர்த்து ஆடிய இந்திய அணி 17.3 ஓவர்களில் வென்றது. இந்தப் போட்டியில் நன்காவதாக களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் கோலி, இறுதிவரை ஆட்டமிழக்காமல் 17 பந்துகளில் 30 ரன்கள் விளாசினார். இந்த ரன்களின் மூலம் இரண்டு சாதனைகள் கோலி படைத்துள்ளார்.

இந்தூரில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான போட்டிக்கு முன்பு வரை விராட் கோலியும், இந்திய துணைக் கேப்டன் ரோகித் சர்மாவும் தலா 2 ஆயிரத்து 633 ரன்கள் குவித்து முதலிடத்தில் இருந்தனர். இந்நிலையில், 30 ரன்கள் எடுத்ததால் கோலி, சர்வதேச இருபது ஓவர் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற சாதனையை தமதாக்கியுள்ளார். இதுவரை 75 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 2663 ரன்கள் சேர்த்துள்ளார்.

இதுதவிர டி20 போட்டிகளில் கேப்டனாக இருந்து 1000 ரன்களை கோலி கடந்துள்ளார். போட்டி முடிந்த பின்னர் பேசிய கோலி, “மிகவும் மகிழ்ச்சி. சிறப்பாக ஆடியிருக்கிறோம். அணிக்காக நாம் எதையாவது செய்ய வேண்டும். கடந்த தொடரை விட தற்போது இன்னும் பலம் பெற்றுள்ளோம். ரோகித் ஷர்மா இல்லாமல் இப்படி ஒரு வெற்றியை பெற்றிருப்பது அணிக்கு ஒரு நல்ல சான்று தான்” என்று குறிப்பிட்டார்.