விளையாட்டு

கிரிக்கெட் இல்லனா என்ன? வாங்க 'ஃபுட்பால்' விளையாடலாம்: இந்தியா-நியூசிலாந்து வீரர்கள் ஜாலி

கிரிக்கெட் இல்லனா என்ன? வாங்க 'ஃபுட்பால்' விளையாடலாம்: இந்தியா-நியூசிலாந்து வீரர்கள் ஜாலி

சங்கீதா

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் 20 ஓவர் போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது.

3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதல் 20 ஓவர் போட்டி வெலிங்டனில் இன்று மதியம் 12 மணிக்கு துவங்க இருந்தது. டி20 உலகக் கோப்பை அரையிறுதி தோல்விக்குப் பின், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய இளம் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்த இருந்தன.

ஆனால் டாஸ் போடும் நேரத்தில் மழை குறுக்கிட்டதால், தாமதம் ஏற்பட்டது. மழை விட்டதும் போட்டி துவங்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து பலத்த மழை காரணமாக ஒரு பந்துகூட வீசாமல் போட்டி கைவிடப்பட்டது. ஹர்திக் பாண்ட்யா தலைமையில் இளம் வீரர்கள் எவ்வாறு விளையாடப் போகிறார்கள் என்று ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

அடுத்ததாக வரும் இரண்டு போட்டிகளில் வெற்றி பெறும் அணிதான் தொடரை கைப்பற்றும். ஒரு போட்டியில் வெற்றி மற்றும் ஒரு போட்டியில் தோல்வியை சந்தித்தால் தொடரின் கோப்பையானது இரு அணிகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்படும். இதற்கிடையில் போட்டி துவங்குவதற்கு தாமதமான நேரத்தில் இந்தியா- நியூசிலாந்து அணி வீரர்கள் கால்பந்து விளையாடி மகிழ்ந்தனர். இந்த வீடியோவை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.