'சதம் அடிக்க வேண்டும் என்ற அழுத்தம் இருந்தால், அது நமது பேட்டிங் திறனை பாதிக்கும்' எனத் தெரிவித்துள்ளார் புஜாரா.
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை கான்பூரில் தொடங்குகிறது. இப்போட்டியில் விராட் கோலி, கே.எல். ராகுல் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் விலகியுள்ள நிலையில், ரஹானே தற்காலிக கேப்டனாக செயல்படுகிறார். ரன் குவிக்க வேண்டிய நெருக்கடியில் டெஸ்ட் சீனியர்களான புஜாரா, ரஹானே உள்ளனர்.
இதுவரை 90 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 18 சதங்கள் விளாசியிருக்கும் புஜாரா, பல இன்னிங்ஸ்களில் அணியின் வெற்றிக்கு கைகொடுத்திருக்கிறார். ஆனால் புஜாரா கடைசியாக 2019 ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலேயே சதம் விளாசினார். அதற்கு பிறகு அவர் 22 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஒரு சதம் கூட அடிக்கவில்லை. அதிகளவில் பந்துகளை எதிர்நோக்கி சொற்ப ரன்களில் ஆட்டமிழப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது.
இதனிடையே, சதம் அடிக்காதது குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த புஜாரா, ''நான் 50, 80, 90 ரன்களில் ஆட்டமிழந்து வருகிறேன். எப்போதும் போல் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறேன். சதம் அடிக்கவில்லை என்று எனக்கும் தெரியும். ஆனால் அதை பற்றி கவலைப்படவில்லை. அணியின் ஸ்கோரை உயர்த்துவதிலேயே என் கவனம் இருக்கும். அப்படி விளையாடினால் நிச்சயமாக சதமும் அடிக்க வாய்ப்பு உள்ளது.
எனது டெக்னிக்கில் எந்த மாற்றமும் செய்யவில்லை. ஒவ்வொரு போட்டியையும் மகிழ்ச்சியுடன் விளையாட விரும்புகிறேன். சதம் அடிக்க வேண்டும் என்ற அழுத்தம் இருந்தால், அது நமது பேட்டிங் திறனை பாதிக்கும். கொஞ்சம் பயமின்றி இங்கிலாந்தில் விளையாடினேன். அதே போன்ற மனநிலையில் தான் இந்த தொடரிலும் உள்ளேன்'' என்று கூறினார்.