இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2-வது போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 396 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் இரட்டை சதமடித்து அசத்தினார். அவர் 209 ரன்னில் அவுட் ஆனார். இங்கிலாந்து சார்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன், சோயப் பஷிர் மற்றும் ரெஹான் அகமது ஆகியோர் தலா 3 விக்கெட்டு வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 253 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்திய அணி 143 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஜாக் கிராலி 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பென் ஸ்டோக்சும் 47 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்திய அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய பும்ரா 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இரண்டாம் நாள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்து, 171 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கி இரண்டு ரன்கள் சேர்ப்பதற்குள், கேப்டன் ரோகித் சர்மா 13 ரன்னிலும் முதல் இன்னிங்ஸில் இரட்டை சதம் விளாசிய ஜெய்ஸ்வால் 17 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இரண்டு விக்கெட்டுகளையும் இங்கிலாந்தின் சீனியர் வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் வீழ்த்தினார்.
இதனையடுத்து, சுப்மன் கில் உடன் ஸ்ரேயஸ் ஐயர் ஜோடி சேர்ந்து இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஸ்ரேயாஸ் ஐயர் 29 ஆட்டமிழக்க, அவரை தொடர்ந்து வந்த ராஜட் பட்டிதாரும் 9 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். விக்கெட்டுகள் சரிந்தாலும் சுப்மன் கில் பவுண்டரிகளாக விளாசி ரன்களை குவித்தார். அக்ஸர் பட்டேல் அவருக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார். 11 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் சதத்தை பதிவு செய்தார் சுப்மன் கில். டெஸ்ட் கிரிக்கெட்டில் இது அவருடைய மூன்றாவது சதம் ஆகும்.
கடந்த ஆண்டு சுப்மன் கில் வாழ்க்கையில் மிகவும் சிறப்பான ஆண்டாக அமைந்திருந்தது. ஏராளமான சதங்கள் விளாசி 2000 ரன்களுக்கு மேல் குவித்து இருந்தார். கடந்த ஆண்டில் சிறந்த வீரர் ஆகவும் அறிவிக்கப்பட்டார். ஆனால், இந்த ஆண்டு அவருக்கு தொடர் சறுக்கல்களை ஏற்படுத்தி வந்தது. ரன்களை குவித்த முடியாமல் திணறி வந்தார். இந்த நிலையில், இந்த சதம் அவருக்கு சிறந்த கம்பேக் ஆக அமையும் என்று தெரிகிறது.
சதம் அடித்த சுப்மன் கில் 104 ரன்னில் சோயிப் பஷிர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். சுப்மன் கில்லை தொடர்ந்து அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அக்சர் பட்டேல் 45 ரன்னில் நடையைக் கட்டினார்.
இந்திய அணி 64 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்கள் சேர்த்துள்ளது. ஸ்ரீகர் பாரத், அஸ்வின் களத்தில் விளையாடி வருகின்றனர். இன்றைய மீதி நேரம் இல்லாமல் இரண்டு நாட்கள் முழுமையாக உள்ளதால் 400 ரன்களுக்கு மேல் இலக்கு வைத்தால் தான் இந்திய அணி வெற்றி வாய்ப்பை உறுதி செய்ய முடியும். இங்கிலாந்து அணியில் பேட்டிங் பலமாகவே உள்ளது. அதனால், ஆல் அவுட் ஆவதற்குள் இந்திய அணி இன்னும் 50 ரன்களுக்கு மேல் ஆவது எடுக்க வேண்டும்.