இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் அடுத்தடுத்த போட்டிகளுக்கு ஆஸி. கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கடுமையாக உழைக்க வேண்டும் என்று அந்த அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார்.
கேப்டன் ஸ்மித் உடன், அணியின் அனைத்து வீரர்களும் தீவிரமாக போராட வேண்டும் என்றும், இனி வரும் மற்ற போட்டிகளை வெற்றி பெறுவது ஆஸி. வீரர்களுக்கு பெரும் சவாலாக இருக்கும் என்றும் கிளார்க் கூறியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற இந்திய - ஆஸி. அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா அபாரமாக வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு தோனி முக்கிய காரணமாக இருந்தார். இந்நிலையில், ஆஸி. கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தின் பேட்டிங் சிறப்பாக இருக்கிறது எனவும், ஆனால் கேப்டன்ஷிப்பில் அவர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார். பங்களாதேஷ் உடன் விளையாடியபோது ஸ்மித்தின் பேட்டிங் மற்றும் கேப்டன்ஷிப் நன்றாக இருந்தது. ஆனால் இந்தியாவுடனான போட்டியில் எதிர்பார்த்த அளவில் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவுடனான முதல் போட்டியில் தோனி மற்றும் பாண்ட்யா மொத்த போட்டியையும் வெற்றியை நோக்கி திருப்பிவிட்டனர். இதனால் 26 ரன்கள் வித்தியாசத்தில் அபாராமாக அவர்கள் வெற்றி பெற்றனர். ஆனால் வரும் 21ஆம் தேதி நடைபெறவுள்ள 2வது ஒருநாள் போட்டியில் ஆஸி. தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெறும் என நம்புவதாகவும் கிளார்க் கூறியுள்ளார்.