விளையாட்டு

ஃபெடரருக்கு அதிர்ச்சியளித்த இந்திய வீரர் சுமித் நாகல் !

ஃபெடரருக்கு அதிர்ச்சியளித்த இந்திய வீரர் சுமித் நாகல் !

rajakannan

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் பிரபல வீரர் ரோஜர் ஃபெடரருக்கு எதிராக முதல் செட்டை வீழ்த்தி இந்திய வீரர் சுமித் நாகல் அசத்தியுள்ளார்.

கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் முன்னணி வீரர் ரோஜர் ஃபெடரரை இந்திய வீரர் சுமித் நாகல் இன்று எதிர்கொண்டார். முன்னணி வீரர்கள் என்பதால் நிச்சயம் ஃபெடரர் வெற்றி பெறுவார் என்பது தெரிந்தது. இருப்பினும், போட்டியில் ஃபெடரருக்கு அதிர்ச்சி கொடுத்தார் நாகல்.

முதல் சுற்றை 6-4 என சுமித் வெல்ல, ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சுதாகரித்துக் கொண்ட ஃபெடரர் அடுத்த மூன்று செட்களை 6-1, 6-2, 6-4 என கைப்பற்றினார். இந்தப் போட்டி ஏன் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது என்றால், இதற்கு முன்பு போபன்னா(2006), சோம்தேவ் தேவ்வர்மன்(2011), சோம்தேவ் தேவ்வர்மன்(2013) என மூன்று முறை இந்திய வீரர்களிடம் ஃபெடரர் மோதியிருக்கிறார். ஆனால், ஒருமுறை கூட ஒரு செட்டையும் அவர் இழந்ததில்லை. ஆனால், இன்று சுமித் நாகல் முதல் தடத்தை பதித்துவிட்டார். முதல் செட்டை போராடி வென்றுள்ளார்.

டென்னிஸ் ஜாம்பவான் ஃபெடரர் தரவரிசைப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். 22 வயதான சுமித் நாகல் டென்னிஸ் தரவரிசைப்பட்டியலில் 190-வது இடத்தில் உள்ளார். இதுவரை 20 கிராண்ட் ஸ்லாம்கள் வென்றுள்ள பெடரர், 2003-ஆம் ஆண்டு முதல் எந்த கிராண்ட்ஸ்லாம் தொடரிலும் முதல் சுற்றில் தோல்வியடைந்ததில்லை.