விளையாட்டு

இந்தியா முன் காத்திருக்கும் உண்மையான சவால் ! ஆஸிக்கு எதிராக என்ன செய்யப் போகிறார் கோலி ?

இந்தியா முன் காத்திருக்கும் உண்மையான சவால் ! ஆஸிக்கு எதிராக என்ன செய்யப் போகிறார் கோலி ?

jagadeesh

கடந்தாண்டை இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் மறக்கவே முடியாது. ஆம், இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் தொடரில் பங்கேற்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3-2 என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்தியது. இந்த ஒருநாள் தொடர் தோல்வி இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தை கூட அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இப்போது, இந்திய அணி வலுவானதாக இருந்தாலும் அதே ஆஸ்திரேலிய அணி மீண்டும் ஒருநாள் தொடரி்ல் பங்கேற்க இந்தியா வந்துள்ளது.

இந்நிலையில் 2020-ஆம் ஆண்டில் இந்திய மண்ணில் முதன்முதலாக நடைபெற உள்ள ஒரு நாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி இந்தச் சவாலை எதிர்கொள்ள உள்ளது. இன்று தொடங்கும் இத்தொடரில் 3 போட்டிகள் நடைபெற உள்ளன. சவால் நிறைந்த இத்தொடரில் இந்திய அணி தேர்வு எப்படி இருக்கும் என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது. தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மாவுடன் களமிறங்கப் போவது கே.எல்.ராகுலா அல்லது ஷிகர் தவனா என பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்திய அணியில் மத்திய வரிசை பேட்ஸ்மேன்கள் நிலையான ஆட்டத்தை வெளிபடுத்த தவறுவது பின்னடைவாகக் கருதப்படுகி‌றது. ரிஷப் பந்த், ஷ்ரேயஸ் ஐ‌யர், மனிஷ் பாண்டே ஆகியோர் அணியின் மத்திய வரிசையை வலுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இலங்கைக்கு எதிரான தொ‌டரில் அணிக்கு திரும்பிய ஜஸ்பிரித் பும்‌ரா மற்றும் தற்காலிக ஓய்விலிருந்து வந்துள்ள முஹமது ஷமி ஆகியோரால் வேகப்பந்து‌ வீச்சு பலமாக‌ மாறியுள்ளது எனலாம். இவர்களுடன் இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் நவ்தீவ் சைனி, ஷர்துல் தாக்கூர் ஆகியோரும் நம்பிக்கை அளிக்கும் வகையில் பந்துவீசி வருகிறார்கள். சுழற்பந்து வீச்சில் சஹால், குல்தீவ், ஜடேஜா ஆகியோர் தொடர்ந்து சிறந்த ஃபார்மை வெளிப்படுத்தி வெற்றிக்கு கைக்கொடுக்கிறார்கள்.

பொதுவாக‌ ஃபீல்டிங்கில் சிறந்து விளங்கும் இந்திய அணி, அண்மைக்காலமாக கேட்ச்களை தவறவிடுவது வாடிக்கையாகி உள்ளது. எனவே, நேர்த்தியான ஃபீல்டிங்கை வெளிப்படுத்த இந்திய அணி கூடுதல் கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து துறைகளிலும் அசுர பலத்து‌‌டன் உள்ள ஆஸ்திரேலிய அணி, இந்தியாவுக்கு அச்சுறுத்தலாகவே பார்க்கப்படுகிறது. அந்த அணியில் இடம்பெற்றுள்ள பல வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவத்தை பயன்படுத்தி சிறப்பான ஆட்டத்தை வெளிக்கொணர்வார்கள் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இலங்கை, மேற்கிந்தியத்‌தீவுகள் உள்ளிட்ட அணிகளை அண்‌மையில் வீழ்த்தியிருந்த இந்தியாவுக்கு, நிஜ‌மான சவால் இத்தொடரில் தான் காத்திருக்கிறது.

கடைசியாக உலகக் கோப்பை 2019-இல் நடந்த லீக் ஆட்டத்தில் ஆஸி.யை வென்றிருந்தது இந்தியா. 1984 முதல் இரு அணிகளும் தங்கள் முதல் ஒருநாள் தொடரை விளையாடின. இதில் ஆஸ்திரேலியா வென்றது. மொத்தம் நடைபெற்ற 57 ஒருநாள் தொடா்களில் 14-இல் இந்தியாவும், 26-இல் ஆஸ்திரேலியாவும் கைப்பற்றின. ஒரு தொடரை சமமாக பங்கிட்டுக்கொண்டன. போட்டிகளை பொறுத்தவரை 142 ஒருநாள் ஆட்டங்களில் இரு அணிகளும் மோதியுள்ளன. 50-இல் இந்தியாவும், 77-இல் ஆஸி.யும் வென்றுள்ளன. 10 ஆட்டங்களில் முடிவில்லை. 5 ஆட்டங்கள் ரத்து செய்யப்பட்டன.