விளையாட்டு

பெண்கள் விவகாரம்: மன்னிப்புக்கேட்டார் பாகிஸ்தான் வீரர் இமாம் உல் ஹக்!

பெண்கள் விவகாரம்: மன்னிப்புக்கேட்டார் பாகிஸ்தான் வீரர் இமாம் உல் ஹக்!

webteam

பல பெண்களுடன் தொடர்பு கொண்டிருந்த விவகாரம் தொடர்பாக நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்டுள்ளார், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இமாம் உல் ஹக்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குத் தகுதி பெறாமல் லீக் சுற்றுடன் வெளியேறியது. இதனால் அந்த அணியின் கேப்டன் சர்பிராஸ் அகமது மீது விமர்சனங்கள் எழுந்தன. பாகிஸ்தான் அணி, உலகக் கோப்பையை விட்டு லீக் சுற்றிலேயே வெளியேறினாலும் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக், சில போட்டிகளில் சிறப்பாக ஆடினார். பங்களாதேஷூக்கு எதிராக அதிரடி சதம் விளாசி ஆறுதல் அளித்தார். 

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக்கின் மருமகனான இவர், பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தது சமீபத்தில் தெரிய வந்தது. இளம்பெண் ஒருவர், இமாம் உல் ஹக் தனக்கு அனுப்பிய சில மெசேஜ்களை, மீடூ ஹேஷ்டேக்குடன் ட்விட்டரில் பதிவிட்டார். பல பெண்களுடன் அவருக்கு தொடர்பு இருப்பதாகவும் காதலிப்பதாகக் கூறி பேசி வருவதாகவும் அந்தப் பெண் ட்வீட் செய்திருந்தார். இமாம், சாட்டிங் செய்த ஸ்கிரீன் ஷாட்களையும் வெளியிட்டிருந்தார்.

இது சர்ச்சையானது. இமாம் உல் ஹக்கிற்கு எதிராக சமூக வலைத்தளத்தில் கடும் கண்டனங்கள் எழுந்தன. இதற்கு, இமாம் எந்த பதிலும் கூறாமல் இருந்தார். இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய இயக்குனர் வாசிம் கான், இமாம் உல் ஹக்கிடம் பேசினார். அப்போது அவர் மன்னிப்புக் கேட்டதாக வாசிம் கான் தெரிவித்துள்ளார். 

அவர் கூறும்போது, ‘’இது இமாமின் தனிப்பட்ட விவகாரமாக இருந்தாலும் வீரர்கள் ஒழுக்கத்தையும் நெறிமுறைகளையும் கடைபிடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். நாட்டுக்காக விளையாடும் போது அவர்களுக்கு அதிக பொறுப்பு இருக்கிறது. இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காது என நம்புகி றோம்’’ என்றார்.