விளையாட்டு

“எம்.எஸ் தோனி ஒரு பெரிய வீரர்” - ஹர்பஜன் சிங் புகழாரம் 

“எம்.எஸ் தோனி ஒரு பெரிய வீரர்” - ஹர்பஜன் சிங் புகழாரம் 

webteam
இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பைக்கான அணியில் எம்.எஸ்.தோனி இருப்பாரா என்பது குறித்த கேள்விக்கு  ஹர்பஜன் சிங்  கருத்து தெரிவித்துள்ளார்.  
 
13-ஆவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் இப்போதைக்கு நடத்தப்படாது என்று பிசிசிஐ திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இது குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, வெளியிட்டுள்ள ஒரு செய்திக் குறிப்பில், "அடுத்த அறிவிப்பு வரும் வரை 2020 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்படுகின்றன" எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட்டில், கடந்த ஆண்டு நியூசிலாந்திடம் இந்திய அணி தோல்வியடைந்த பின்னர் தோனி எந்தவொரு போட்டியிலும் பங்கேற்கவில்லை. இதனிடையே  தோனி நீண்ட இடைவெளிக்குப் பிறகு  13-வது  இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவதற்காக கடந்த மாதம் சென்னை வந்தார். ஆனால் போட்டிகள் கொரோனா தொற்றுக் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டதால் அவரது ஆட்டைத்தை காண காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றத்தில் தவித்தனர்.
 
 
தோனி, கிரிக்கெட் ஆட்டத்திலிருந்து விலகி இருந்தாலும் அவரைச் சுற்றியே இந்திய கிரிக்கெட் செய்திகள் வெளியாகி வருகின்றன. அவர் அணிக்குத் திரும்புவது குறித்து முன்னாள் வீரர் கபில்தேவ் உட்படப் பலரும் கருத்து கூறிவிட்டனர். இந்நிலையில், இந்த ஆண்டு டி 20 உலகக் கோப்பைக்கான அணியில் எம்.எஸ்.தோனி இருப்பாரா என்பது குறித்த கேள்விக்கு  ஹர்பஜன் சிங்  கருத்து தெரிவித்துள்ளார்.  
 
 
செய்தி நிறுவனத்திடம் பேசிய ஹர்பஜன், “தோனியை எப்படி கணிப்பீர்கள்? நீங்கள் அவரது ஐபிஎல் பார்ம்-ஐ பார்க்கிறீர்களா? அல்லது அவருக்கு மரியாதை அளிக்கிறீர்களா? அவர் இந்தியாவின் மிகச் சிறந்த வீரர்,  கேப்டன்களில் ஒருவர்  என்ற உண்மையைக் கருத்தில் கொள்கிறீர்களா?  அவர் இந்திய கிரிக்கெட்டிற்காக நிறையச் செய்திருக்கிறார்”என்றார்.
 
 
அவர் மேலும், “எம்.எஸ் தோனி ஒரு பெரிய வீரர். அவர் திறமையானவரா இல்லையா என்பதைச்  சொல்லத் தேவையில்லை. எனவே இதைப் பற்றி நீங்கள் அதிகம் சிந்திக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. உங்களுக்கு தோனி தேவை என்று நீங்கள் நினைத்தால், அவரும் கிடைத்தால், நீங்கள் அவரைத் தேர்ந்தெடுங்கள்”என்று  கூறினார்.
 
 
இதற்கிடையில், ஹர்பஜன், சமீபத்தில் தனது சொந்த ஊரான ஜலந்தரில் 5000  குடும்பங்களுக்கு உணவளிப்பதாக உறுதியளித்தார். இது குறித்து அவர், "எங்களிடம் ஒரு குழு உள்ளது. அவர்கள் கடிகாரத்தைப் போல சுற்றி வேலை செய்கிறார்கள். மும்பையிலிருந்து அவர்களுடன் நான் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன். சமூக இடைவெளி விதிமுறைகளை நாங்கள் கண்டிப்பாகக் கடைபிடிக்கிறோம். அவர்களாக இடைவெளிவிட்டு நிற்பதற்கான வட்டங்களை நாங்கள் உருவாக்கியுள்ளோம். அவர்களுக்காக உணவைச் சேகரிக்க நாங்கள் வீடுகளுக்குச் செல்கிறோம் ”என்று அவர் கூறினார்.
 
.