அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் மார்ச் வரை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடக்க உள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானிற்கு இந்திய அணி செல்வது சாத்தியமில்லை என்றும், இந்திய அணி விளையாடும் போட்டி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அல்லது இலங்கையில் நடைபெற வாய்ப்புள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மாதத்தில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான வரைவு அட்டவணையை சமர்பித்துள்ளது. 15 போட்டிகளைக் கொண்ட தொடரில், 7 போட்டிகள் லாகூரிலும், 3 போட்டிகள் கராச்சியிலும், 5 போட்டிகள் ராவல்பிண்டியிலும் நடக்க உள்ளன. இதில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள், ஒருவேளை இந்திய அணி அரையிறுதிக்கு தேர்வானால் அந்த போட்டி உட்பட லாகூரில் நடைபெற உள்ளன.
இதில் மார்ச் 1 ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் சந்திக்க உள்ளன. இறுதிப் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற உள்ளது. ஆனால், பாகிஸ்தான் சென்று பங்கேற்பது குறித்து பிசிசிஐ இதுவரை எந்த ஒரு விளக்கத்தையும் அளிக்கவில்லை.
இந்நிலையில்தான், இந்திய அணி பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில், பங்கேற்பது சாத்தியமில்லை என்றும் ஆசிய கோப்பை போலவே இந்திய அணி தனது போட்டிகளை இலங்கை அல்லது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் விளையாடலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ஐசிசி தனது நிலையில் உறுதியாக இருக்கும் என்றாலும், மத்திய அரசும் இதில் தனது இறுதி முடிவை எடுக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா பாகிஸ்தான் இடையே இருக்கும் உள்விவகாரங்கள் மற்றும் இருநாடுகளுக்கு இடையே நீடிக்கும் பதற்றமான சூழல் காரணமாக, 2008 ஆம் ஆண்டு ஆசியக் கோப்பைக்குப் பிறகு இந்திய அணி பாகிஸ்தானில் எந்த ஒரு கிரிக்கெட் போட்டியையும் விளையாடவில்லை. அதே சமயத்தில், இரு அணிகளுக்கும் இடையிலான இருதரப்பு தொடர்கள் கடைசியாக டிசம்பர் 2012 ஆம் ஆண்டு முதல் ஜனவரி 2013 வரை இந்தியாவில் நடந்தது. அதன்பிறகு அவர்கள் இருதரப்புத் தொடர்களில் விளையாடவில்லை. ஐசிசி மற்றும் ஆசிய கோப்பை போன்ற மிகப்பெரிய தொடர்களில் மட்டுமே இரு அணிகளும் விளையாடி வருகின்றனர்.
அதேசமயத்தில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்திய மண்ணில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறது. கடந்த ஆண்டு நடந்த ஒருநாள் உலகக்கோப்பைப் போட்டி, கடந்த 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் நடந்த 2 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகளைக் கொண்ட தொடரையும் இந்திய மண்ணில்தான் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி விளையாடியது.