கால்பந்து உலகில் இரண்டு ஜாம்பவான்களாக திகழ்பவர்கள் லியோனல் மெஸ்சியும், கிறிஸ்டியனோ ரொனால்டோவும். அர்ஜெண்டினா நாட்டு அணியைச் சேர்ந்தவர் மெஸ்சி. போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்தவர் ரொனால்டோ. மெஸ்சி ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். அதேபோல், ரொனால்டோ இத்தாலி நாட்டின் ஜுவண்டஸ் கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். முன்பு ரியல் மேட்ரிட் அணிக்காக விளையாடி வந்தார்.
இருவரும் கால்பந்து உலகில் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளனர். உலகம் முழுக்க இவர்களுக்கு மாபெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இந்த இரண்டு வீரர்களும் கடந்த இருபது வருடங்களாக கால்பந்து உலகில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். இவர்கள் இருவரும் ஒருவருடன் ஒருவர் போட்டி போட்டிக் கொண்டு களத்தில் விளையாடுவார்கள். ஒருவரை விட மற்றொருவர் அதிக கோல் அடிக்க வேண்டும் என போட்டி இருவருக்கும் உண்டு. இதனை அவர்கள் இருவரும் வெளிப்படையாகவே கூறியிருக்கிறார்கள்.
விளையாட்டில் போட்டி இருப்பது என்பது இயல்பான் விஷயம்தான். ஆனால், அதனையெல்லாம் தாண்டி, மெஸ்சியும், ரொனால்டோவும் ஒருவர் மீது ஒருவர் மிகுந்த மரியாதையும் வைத்திருக்கிறார்கள். இருவரில் யார் சிறந்த வீரர் என அவரது ரசிகர்களுக்கு இடையில் விவாதம் நடைபெற்றுக் கொண்டே இருந்தாலும், விருது மேடைகளில் இருவரும் ஒருவரை ஒருவர் புகழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். மெஸ்சி இருப்பதால்தான் தன்னால் அதிக உந்துதலுடன் சாதனைகளை படைக்க முடிகிறது என ரொனால்டோ கூறியிருந்தார். அதேபோல்தான் மெஸ்சியும்.
இந்நிலையில், சமீபத்தில் பேசிய நேர்காணல் ஒன்றில் ரொனால்டோவை லியோனல் மெஸ்சி புகழ்ந்துள்ளார். “நாங்கள் இருவரும் ஒரே அணியில் இடம்பெற்றால் நிச்சயம் நான் ரொனால்டோவுக்குதான், பந்தினை பாஸ் செய்வேன். ஏனெனில், ரொனால்டோ இயல்பாகவே கோல் போடும் தன்மை கொண்டவர். அவர் ஒரு ‘predatory striker’. அவர் கோல் போட எப்போதும் விரும்புவார். எந்த நாளில் விளையாடினாலும் கோல் அடித்துவிடுவார். அதுவும் குறைந்த நேரத்தில் பந்தினை கோலாக மாற்றும் தன்மை கொண்டவர்” என்று மனம் திறந்து பாராட்டினார் மெஸ்சி.
மேலும் பேசுகையில், “கோல் போடுவதோடு மட்டுமின்றி, மேலும் நிறைய விஷயங்களை அவர் செய்வார். ஒரு சீசனுக்கு 50 கோல்களை போடும் ஒரு வீரரை வைத்துக் கொண்டு ஒரு அணி தோல்வியடைகிறது என்றால் அது கவனிக்கத்தக்கது. ரியல் மேட்ரிட் சிறந்த வீரர்களை கொண்டிருந்தாலும், ரொனால்டோதான் 50 கோல்களை ஒவ்வொரு சீசனிலும் போடுகிறார்” என்றார் மெஸ்சி.
அத்துடன், “நாங்கள் இருவரும் நல்ல நட்புறவில்தான் இருக்கிறோம். நாங்கள் ஒன்றாக சேர்ந்த உணவு உட்கொண்டதில்லைதான். ஆனால், எதிர்காலத்தில் அது நடைபெறும் என்று நம்புகிறேன்” என்றும் மெஸ்சி கூறினார்.