விளையாட்டு

ஐபிஎல் ஆடும் ரோகித் ஏன் இந்திய அணியில் இல்லை?- பிசிசிஐக்கு கேள்வி எழுப்பும் சேவாக்

ஐபிஎல் ஆடும் ரோகித் ஏன் இந்திய அணியில் இல்லை?- பிசிசிஐக்கு கேள்வி எழுப்பும் சேவாக்

webteam

ஐபிஎல் போட்டியில் ரோகித் சர்மா விளையாடும்போது, ஏன் இந்திய அணியில் விளையாட முடியாது என முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்த ரோகித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் சில போட்டிகளில் விளையாடவில்லை. அதனால் அந்த அணிக்கு பொல்லார்டு கேப்டனாக செயல்பட்டு வந்தார். எஞ்சியிருக்கும் போட்டிகளிலும் மும்பைக்காக ரோகித் சர்மா விளையாடமாட்டார் எனக் கூறப்பட்டது. இதற்கிடையே ஆஸ்திரேலிய சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டது.

அதில் ரோகித் சர்மா இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக கே.எல்.ராகுல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் ரோகித் சர்மா குறித்து ரவி சாஸ்திரி பேசினார். "அவர் காயமடைந்திருப்பதால் மருத்துவக் குழுவினர் அவரை கண்காணித்து வருகின்றனர். எங்களால் அதில் தலையிட முடியாது. ரோகித் சர்மா குறித்த மருத்துவ அறிக்கை தேர்வுக் குழுவினரிடம் கொடுக்கப்பட்டுள்ளது" என்றார். காயம் காரணமாக ரோகித் விளையாடவில்லை என்று கூறப்பட்ட நிலையில் நேற்றைய ஐபிஎல் போட்டியில் அவர் விளையாடினார்.

இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் ரோகித் சர்மா விளையாடும் போது, ஏன் இந்திய அணியில் விளையாட முடியாது என முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து பேசியுள்ள அவர்,அவர் காயமடைந்து இருந்தால் அவருக்கு பதில் வேறு ஒருவரை எடுத்திருக்க வேண்டும். அவர் நேற்றைய ஐபிஎல் போட்டியில் விளையாடினார். பிளே ஆஃப் போட்டியிலும் விளையாடுவார், அவர் உடல்தகுதியோடு இருப்பதாக கூறுகிறார். பின்னர் ஏன் அவர் இந்திய அணியில் இடம் பெறவில்லை. இது பிசிசிஐன் தவறான மேலாண்மை என தெரிவித்துள்ளார்.

முன்னதாக ரோகித் குறித்து பேசிய கங்குலி, உடல்தகுதியாக இருந்தால் ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணியில் ரோகித் சேர்க்கப்படுவார் எனத் தெரிவித்திருந்தார். எனவே ஆஸ்திரேலியா டூரில் ரோகித் இடம்பெறுவாரா இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.