விளையாட்டு

"நீங்க பாகிஸ்தானுக்கு வந்து விளையாடலனா, அப்புறம்"- பிசிபி மிரட்டல்; அதிர்ச்சியில் பிசிசிஐ

"நீங்க பாகிஸ்தானுக்கு வந்து விளையாடலனா, அப்புறம்"- பிசிபி மிரட்டல்; அதிர்ச்சியில் பிசிசிஐ

jagadeesh

ஆசியக் கோப்பை தொடரில் பங்கேற்க இந்தியா பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால் நாங்கள் உலகக் கோப்பையில் பங்கேற்க இந்தியாவுக்கு வரமாட்டோம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் நஜாம் சேத்தி பிசிசி செயலாளர் ஜெய் ஷாவிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஆசியகோப்பையானது 2023ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் தொடரானது 2023ல் செப்டம்பர் மாதம் தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் பிசிசிஐ செயலாளரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான ஜெய்ஷா பாகிஸ்தானில் நடக்கும் ஆசியகோப்பையில், பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய இருநாடுகளுக்குமிடையேயான அரசியல் பதற்றம் காரணமாக இந்தியா பங்கேற்காது என தெரிவித்தார். இது தொடர்பான அவசரக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

இதனையடுத்து ஆசிய கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டது, அதில் ” வரவிருக்கும் 2023ஆம் ஆண்டின் ஆசியக்கோப்பை குறித்த ஆக்கப்பூர்வமான உரையாடலை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நடத்தியது. தொடரை நடத்துவதை உறுதி செய்யும் நோக்கில் அதற்கான செயல்பாடுகள், காலக்கெடு மற்றும் மற்ற முக்கிய விவரங்கள் பற்றிய விவாதங்களைத் தொடர்ந்து மேற்கொள்ள வாரியம் சம்மதித்துள்ளது. ஆசியகோப்பை குறித்த முக்கியமான முடிவுகள் மார்ச் மாதம் மீண்டும் நடத்தப்படும் அடுத்த கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்" என கூறப்பட்டு இருந்தது.

இந்நிலையில் சனிக்கிழமை நடைபெற்ற ஆசியக் கோப்பை கவுன்சில் கூட்டத்தில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் நஜாம் சேத்தி "இந்தியா பாகிஸ்தானுக்கு வந்து ஆசியக் கோப்பையில் பங்கேற்க வேண்டும். அப்படி நீங்கள் வர மறுப்பு தெரிவித்தால். எங்களால் இந்தியா வந்து உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க முடியாது" என தெரிவித்ததாக கூறப்படுகிறது. நஜாம் சேத்தியின் இந்தப் பேச்சு ஜெய் ஷாவை அதிர்ச்சியடைய வைத்ததாக கூறப்படுகிறது. இவையெல்லாம் ஒருபுறம் இருக்க பாகிஸ்தானில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக ஆசியக் கோப்பை தொடர் அமீரத்துக்கு மாற்றப்படும் என்றும் கூறப்படுகிறது.