ராணுவ முத்திரை பதித்த கீப்பர் கையுறையில் பயன்படுத்திய விவகாரத்தில் தோனிக்கு ஆதரவாக மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரென் ரிஜிஜு கருத்து தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை தொடரில், இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையிலான போட்டி, சவுதாம்ப்டன் நகரில் நேற்று முன் தினம் நடந்தது. இந்தப் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டியின் போது, விக்கெட் கீப்பர் தோனி, பாராமிலிட்டரியின் பாலிடன் முத்திரை பதித்த கையுறைகளை அணிந்திருந்தார். இந்த முத்திரையின் அர்த்தம் ‘தியாகம்’ என்பதாகும்.
கடந்த 2011ஆம் ஆண்டு தோனிக்கு, ராணுவத்தில் கவுரவ லெப்டினென்ட் பதவி வழங்கப்பட்டது. 2015ஆம் ஆண்டு தோனி, பாராமிலிட்டரி பிரிவில் சிறிய பயிற்சியும் மேற்கொண்டார். தனது கையுறையில் பாலிடன் முத்திரையை தோனி பதித்திருந்தற்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் கிடைத்தன. சில மீடியாக்கள் இதுபற்றி விவாதங்களையும் நடத்தின. இதற்கிடையே, தோனி தன் கையுறையில் இருக்கும் முத்திரையை நீக்க வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வலியுறுத்தியது.
இதுதொடர்பாக விளக்கமளித்து ஐசிசி, ஒரு கையுறையில் நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட இரண்டு முத்திரைகள் மட்டுமே இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. ஐசிசி விதிகளின் படி சர்வதேச போட்டிகளில் விளையாடும் வீரர்களின் ஆடைகளில் மதம், அரசியல் உள்ளிட்டவை தொடர்பான முத்திரைகளுக்கு அனுமதியில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், தோனிக்கு ஆதரவாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரென் ரிஜிஜு கருத்து தெரிவித்துள்ளார். அவர் தன்னுடைய ட்விட்டரில், “இந்த விவகாரம் நாட்டின் உணர்வுகளோடு சம்பந்தமானவை. நாட்டின் நலனும் இதில் அடங்கியுள்ளது என்பதை மனதில் வைக்க வேண்டும். மகேந்திர சிங் தோனிக்கு ஆதரவாக செய்ய வேண்டிய நடவடிக்கைகளை செய்ய வேண்டுமென பிசிசிஐக்கு வலியுறுத்துகிறேன்” என்று கூறியுள்ளார்.
இதனிடையே, தோனி அறிந்துள்ள கையுறையில் வணிக ரீதியான, மத ரீதியான முத்திரை அல்லது என்பதை குறிப்பிட்டு, அதற்கான அனுமதியை வழங்க வேண்டும் என ஐசிசிக்கு பிசிசிஐ முறைப்படி வலியுறுத்தியுள்ளது. ஆனால், பிசிசிஐ விடுத்த கோரிக்கையை ஐசிசி நிராகரித்துள்ளது.